"நாட்டின் பொருளாதாரத்தை மீட்க கடவுளின் ஆசீர்வாதம் வேண்டும்" - பிரதமருக்கு கேஜ்ரிவால் கடிதம்

"நாட்டின் பொருளாதாரத்தை மீட்க கடவுளின் ஆசீர்வாதம் வேண்டும்" - பிரதமருக்கு கேஜ்ரிவால் கடிதம்

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகப் பெருமானின் படங்கள் இருக்க வேண்டும். இது நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உதவும் என்ற தனது கோரிக்கையை வலியுறுத்தி நரேந்திர மோடிக்கு ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் இன்று முறைப்படி கடிதம் எழுதியுள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் இந்தியில் எழுதியுள்ள கடிதத்தை அவர் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், "130 கோடி இந்தியர்கள் சார்பாக வேண்டுகோள். மகாத்மா காந்தியுடன் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் படங்களையும் கரன்சி நோட்டுகளில் வைக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தியா வளரும் மற்றும் ஏழை நாடாக அறியப்படுகிறது. ஒருபுறம், குடிமக்கள் கடினமாக உழைக்க வேண்டும், ஆனால் நமது முயற்சிகளுக்கு கடவுளின் ஆசீர்வாதமும் தேவை. அதுவே நமக்கு நல்ல பலனைத் தரும்" என்று தெரிவித்துள்ளார்

நேற்றைய செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், தனது கோரிக்கைக்கு மக்களின் பெரும் ஆதரவு இருப்பதாகக் கூறினார். மேலும், "மக்கள் மிகவும் உற்சாகமாக உள்ளனர், இது விரைவில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்

இந்த கருத்துக்காக அர்விந்த் கேஜ்ரிவால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். மற்ற எதிர்க்கட்சிகளை ஓரங்கட்டி பாஜகவுக்கு முதன்மையான சவாலாக மாறுவதற்காக, பாஜகவின் அரசியலைப் பிரதிபலிக்கும் ஆம் ஆத்மி கட்சியின் முயற்சி இது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெறவுள்ளன. அதே போல் டெல்லி உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களும் நடைபெறவுள்ளன. எனவே, இந்த ரூபாய் நோட்டு கோரிக்கை மூலம் பாஜகவை ஓரங்கட்டி, அதன் பாரம்பரிய பெரும்பான்மை வாக்காளர் தளத்தை கைப்பற்ற ஆம் ஆத்மி கட்சி முயற்சித்து வருகிறது எனவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in