`40க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும்'- முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் முழக்கம்

`40க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும்'- முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் முழக்கம்

"நாற்பதும் நமதே, நாடும் நமதே, நாற்பதுக்கு 40 என்பதற்கு விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டார்.

விருதுநகர் அருகே பட்டபுதூரில் தி.மு.க. முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் முன்னோடிகளுக்கு பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகளை வழங்கினார். விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

முப்பெரும் விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தை திராவிட மாடல் கொள்கையோடு வலுப்படுத்தும் நமக்கு, இந்தியா முழுமைக்கான சில கடமைகள் நம்மிடத்தில் இருக்கிறது. கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் நிலைநாட்ட வேண்டும். வலுவான மாநிலங்கள் தான் கூட்டாட்சியின் அடிப்படை. நான் மட்டுமல்ல, வலிமையான அதிகாரம் பொருந்திய தன்னிறைவு பெற்ற மாநிலமாக இருந்தால் மட்டுமே போதாது. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் வலுவான மாநிலங்களாக ஆக வேண்டும். அதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் கொள்கை. நாம் வலிமையான, வளமான மாநிலமாக இருப்பதனால்தான் மக்களுக்கு பல நன்மைகளை செய்ய முடிகிறது.

இந்த அதிகாரம் பறிக்கப்படுமானால், தடுக்கப்படுமானால் இந்த அளவுக்கு நன்மைகளை செய்ய முடியாது. ஒற்றைத்தன்மை கொண்டதாகவும். ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதையும் நாம் ஏற்க முடியாது. ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக நிதி உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. நீட் கல்விக் கொள்கை மூலம் இன்றைக்கு நம்முடைய உரிமை மறுக்கப்பட்டுவிட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள் மக்கள் விரோத சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்கள் மூலமாக இரட்டை ஆட்சி முறையை நடத்த பார்க்கிறார்கள். இவற்றை தடுக்க நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டில் இருந்தும் புதுச்சேரியில் இருந்தும் நமது கூட்டணி சார்பில் 40 உறுப்பினர்கள் இருந்தாக வேண்டும். இந்தியாவில் மூன்றாவது கட்சியாக நமது இயக்கம் அமர்ந்திருப்பது நமக்கு பெருமை. அது தொடர இப்பொழுதே நீங்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.

வெற்றிக்கனியை பறித்து கழகத்திற்கும் உங்களுக்கும் புகழ் சேர்க்க வேண்டும். கடந்த முறை பார்த்தோமே, நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்பு ஏற்கும்போது பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க, தமிழ் வாழ்க, திராவிடம் வெல்க என்று முழக்கமிட்டு நாடாளுமன்றத்தையே அதிர வைத்ததை பார்த்தோம். அந்த பெருமையை தக்கவைக்க வேண்டுமானால் 40க்கு 40 என்ற வெற்றியை நாம் அடைந்தாக வேண்டும். 2004-ம் ஆண்டு தலைவர் கலைஞர் முழக்கமிட்டார். 2019-ம் ஆண்டு உங்களில் ஒருவனான நான் முழங்கினேன். மீண்டும் நாம் இப்போது முழங்குவோம். நாற்பதும் நமதே, நாடும் நமதே, நாற்பதுக்கு 40 என்பதற்கு விருதுநகர் முப்பெரும் விழா தொடக்கமாக அமையட்டும்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in