பாஜகவுக்கு என்ன வலு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும்! -ஜெயக்குமார் கிண்டல்

ஜெயக்குமார்
ஜெயக்குமார் hindu கோப்பு படம்

“பாஜக முடிவால் எந்த பாதிப்பும் இல்லை. பாஜகவுக்கு என்ன வலு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும்” என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாகக் கூறினார்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டன. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக மட்டுமே பெரிய கட்சியாக இருந்தது. இதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கேட்க பாஜக திட்டமிட்டிருந்தது. அதன்படி அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை, அதிக அளவில் ஒதுக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்தது.

ஆனால், இதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்தது. ஏற்கெனவே, பாஜகவுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளதால், நாங்கள் கொடுக்கும் இடங்களில் மட்டுமே நீங்கள் போட்டியிட வேண்டும் என அதிமுக கேட்டுக்கொண்டது. இதை பாஜக ஏற்கவில்லை. இந்நிலையில் பாஜக தனித்துப்போட்டியிட உள்ளதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பாஜகவின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியாத சூழலில் அதிமுக உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவது என்பது அக்கட்சி எடுத்த முடிவு. அதிமுக ஆலமரம், இந்த ஆலமரத்தின் நிழலில் எத்தனையோ கட்சிகள் பலனடைந்துள்ளன. பாஜகவுக்கு என்ன வலு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோர் நான் நேசிக்கக் கூடிய தலைவர்கள். எதிர்காலத்தில் பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமைதான் முடிவு செய்யும். பாஜக முடிவால் எந்த பாதிப்பும் இல்லை. வெற்றி சின்னம் மேஜிக் சிம்பல் இரட்டை இலை எங்களிடம் உள்ளது. அம்மா ஆட்சியின் சாதனையை மக்கள் நினைத்துப் பார்த்திருக்கிறார்கள். எனவே நாங்கள் மகத்தான வெற்றி பெறுவோம்” என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in