`நீட்'டுக்கு எதிரான சமரசமற்ற அகிம்சைப் போர் தொடங்கியுள்ளோம்'

திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

"சமூகநீதியை வெட்டிச் சாய்க்க வெறிகொண்டு துடிக்கும் நீட் எனும் கொடுவாளை ஏந்தியிருக்கும் எதேச்சாதிகாரத்தின் கரங்களை சட்டரீதியாக ஒடுக்குவதில் சமரசமற்ற அகிம்சைப் போரினைத் தொடங்கியுள்ளோம்" என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சாதனையைச் சொல்வோம்; களத்தை வெல்வோம் என்ற வார்த்தைக்கேற்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், நல்லாட்சி வழங்கி வரும் தி.மு.கழக அரசின் திட்டங்கள் உள்ளாட்சிவரை படிநிலைகளின் வழியே ஊடுருவிச் சென்று, ஒவ்வொரு ஊரிலும், அதில் உள்ள ஒவ்வொரு தெருவிலும், அங்கே வாழ்ந்துவரும் ஒவ்வொரு குடும்பத்திலும், அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பயன்பெற்று மகிழ்ந்திட வேண்டும் என்ற உன்னத நோக்கமே, நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் நமக்கான இலக்காகும். கழக வேட்பாளர்களும், தோழமைக் கட்சி வேட்பாளர்களும், ஒவ்வொரு வாக்காளரையும் தவறாமல் நேரில் சந்தித்து, வேண்டுகோள் விடுத்து, தங்கள் வெற்றியை உறுதிசெய்யும் விளக்கப் பரப்புரையை மேற்கொள்கின்ற நேரம் இது.

எந்தவொரு ஆக்கப்பூர்வமான, பொறுப்பான விமர்சனத்தையும் முன்வைக்க முடியாத எதிர்க்கட்சியினர், ஈரைப் பேனாக்கி இட்டுக் கட்டும் வேலையைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். வெறும் வாயையே மென்று சுகம் காணும் அவர்களுக்கு, வெல்லமும் அவலும் கலந்து வாயில் போட்டது போலாகிவிடும் என்பதே என் எண்ணம். விமர்சனங்களை நேரடியாக எதிர்கொள்ள எப்போதும் நான் தயங்கியதில்லை. உங்களில் ஒருவனான என் மீது, சட்டமன்றத் தேர்தல் களத்திலும், அதற்கு முன்பும், என்னென்ன விமர்சனங்களை வைத்தார்கள் என்பதை உடன்பிறப்புகளாகிய நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். அவர்களின் விமர்சனங்களுக்கு, நம்முடைய சீரிய செயல்பாடுகளால், செம்மையான பதிலடி தர வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அதனால், நேரடிப் பரப்புரை நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, காணொலிப் பரப்புரைக் கூட்டங்கள் வாயிலாக, உடன்பிறப்புகள் மற்றும் வாக்காளர்களின் ஒளிமுகம் கண்டு, அகம் மிக மகிழ்கிறேன்.

முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்
முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்

திராவிட இயக்கம், தனது இலட்சியங்களை மக்களின் மனதில் பதிய வைப்பதற்காக திண்ணைப் பரப்புரை, தெருமுனைக் கூட்டம், துண்டறிக்கை, பத்திரிகை, படிப்பகம், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி விளம்பரம் எனக் காலத்திற்கேற்ற - கண்ணையும் கருத்தையும் கவரும் வடிவங்களை வெற்றிகரமாக கையாண்ட இயக்கம். இன்றைய அறிவியல் - தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, தனிநபர் ஊடகங்களாக விளங்கும் சமூக வலைத்தளங்களையும் இணைய வழி நிகழ்வுகளையும், நெறி பிறழ்ந்திடாது, முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு பரப்புரை செய்திடல் வேண்டும். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை, ஒன்று விடாமல் கவனமாகப் பின்பற்றிட வேண்டும்.

காணொலியில் முன்வைக்கும் கருத்துகளை அவரவர் வார்டுகளிலும், வீடு வீடாகச் சென்று, விளக்கமளித்து, வாக்குகளைச் சேகரியுங்கள். ஆட்சிக்கு வந்த எட்டு மாதங்களில், தி.மு.கழகம் முழுமையான அர்ப்பணிப்புடன், மக்கள் பணியே மகேசன் பணியெனக் கொண்டு, நாள்தோறும் உழைத்து வருவதைக் கண்டு உணர்ந்திருக்கும் மக்கள், ஒருபோதும் எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட பொய்ப் பரப்புரை எனும் மாய வலையில் விழ மாட்டார்கள். நம் பக்கமே அவர்கள் நம்பிக்கையுடன் இருப்பார்கள். நாம் என்றும் அவர்கள் பக்கம் அக்கறையுடன் இருப்போம். கொள்கை வழிப் பயணத்தில் எத்தனை சவால்கள், சங்கடங்கள் குறுக்கிட்டாலும், காட்டாறுகளும் நெருப்பாறுகளும் மோதினாலும், அவற்றை அஞ்சாமல் எதிர்கொண்டு, அயராது பயணத்தைத் தொடர்ந்து வருகிறோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் கவனம் செலுத்துவதும்கூட, கொள்கைகளை நிறைவேற்றப் பயன்படும் பயணத்தின் ஒரு கட்டம்தான்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

அதில் கவனம் செலுத்துகிற அதே நேரத்தில், அதைவிடவும் கூடுதல் கவனத்துடன் பாடுபட்டு வளர்த்தெடுத்த சமூகநீதியை வெட்டிச் சாய்க்க வெறிகொண்டு துடிக்கும் நீட் எனும் கொடுவாளை ஏந்தியிருக்கும் எதேச்சாதிகாரத்தின் கரங்களை சட்டரீதியாக ஒடுக்குவதில் சமரசமற்ற அகிம்சைப் போரினைத் தொடங்கியுள்ளோம். பிப்ரவரி 8-ஆம் நாள் கூட்டப்படும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தின் நோக்கமும், அதில் நிறைவேற இருக்கிற தீர்மானமும், கடைக்கோடித் தமிழ் மாணவருக்கு எட்டாக் கனியாக இருக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிட்ட வேண்டும் என்பதுதான்! அதனையும் கருத்தில் வைத்தே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான காணொலிப் பரப்புரைகளில் பங்கேற்கிறேன்.

தமிழ்நாட்டின் அனைத்து மக்களுக்குமான உரிமைகளை உறுதியாக நிலைநாட்டும் நமது இலட்சியப் பயணத்தின் வெற்றி, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் முழுமையாக அமைந்திட, உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் களப் பணியாற்றுங்கள். கழகத்தினருடனும் தோழமைக் கட்சியினருடனும் ஒருங்கிணைந்து உற்சாகமாகப் பணியாற்றுங்கள். மக்களிடம் செல்லுங்கள்; மகத்தான வெற்றியை அவர்கள் மனமுவந்து தருவார்கள்'' என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in