`நாங்கள் இணைய வாய்ப்பே இல்லை'- நீதிபதிகளின் கேள்விக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆணித்தரமாக பதில்

`நாங்கள் இணைய வாய்ப்பே இல்லை'- நீதிபதிகளின் கேள்விக்கு ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆணித்தரமாக பதில்

நீங்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைவீர்களா? என்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு, இரண்டு பேரும் இணைய மாட்டோம் என்று ஓபிஎஸ்- ஈபிஎஸ் ஆணித்தரமாக பதில் அளித்துள்ளனர்.

சென்னையில் ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஓபிஎஸ், அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் மாறி மாறி கட்சி நிர்வாகிகளை நீக்கினர்.

இந்நிலையில், இந்த பொதுக்குழு முடிவுகளுக்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீங்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு, இரண்டு பேரும் இணைய மாட்டோம் என்று ஆணித்தரமாக பதில் அளித்தனர்.

பொதுக்குழு தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுவில் என்ன நடந்தது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அடிப்படை விதிகளை மீறி அத்தனை முடிவுகளையும் எடுத்துள்ளனர் என்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓபிஎஸ் வலியுறுத்தினார்.

இதையடுத்து, உயர் நீதிமன்றத்தை நாட ஓபிஎஸ் தரப்பை அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் 3 வாரத்தில் ஓபிஎஸ் கோரிக்கை மனுவை விசாரித்து முடிக்கவும் உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in