கார்கேயிடம் காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டேன்!

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி பேட்டி
விஜயதரணி
விஜயதரணி

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமல் மனதில் பட்டதை பளிச்சென பேசிவிடுபவர் காங்கிரஸ்எம் எல்ஏ-வான விஜயதரணி. தொடர்ந்து மூன்றாவது முறையாக விளவங்கோடு தொகுதியைத் தக்கவைத்திருக்கும் விஜயதரணி, இந்த சீனியாரிட்டியைக் காட்டியே தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியைக் கேட்பதாக தகவல் கசிந்ததால் அதுகுறித்து அவரிடம் பேசினோம். இனி அவரது பேட்டி.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காய் நகர்த்துகிறீர்களாமே..?

காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை நேரடியாக சந்தித்து என் விருப்பத்தைத் தெரிவித்தேன். ஏற்கெனவே எனக்கு காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் வாய்ப்பு வழங்கவில்லை. இத்தனைக்கும் அப்போது நடந்த வாக்கெடுப்பிலும் நான் அதிக வாக்கு பெற்று இருந்தேன். எம்எல்ஏ-க்களிலும் சீனியர் நான் தான். ஆனாலும் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுவிட்டது. இப்போது கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. தலைமை அவரை மாற்ற முடிவு எடுத்திருந்தால் எனக்குக் கொடுங்கள் எனக் கோரிக்கை வைத்தேன்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள் சென்டிமென்ட் அதிகம். ஜெயலலிதா அதிமுக என்னும் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்ததால்தான் பெண் வாக்காளர்களைக் கவர முடிந்தது. அதேபோல் காங்கிரஸ் தமிழக தலைமை பதவியும் ஒரு பெண்ணுக்கு கொடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். நான் தீவிர காங்கிரஸ் விசுவாசி. என் வாழ்வின் எந்தச் சூழலிலும் காங்கிரஸைவிட்டுத் தடம் மாறியதோ, தடுமாறியதோ இல்லை.

சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக இருந்தவரை பெண்களுக்கான பிரதிநிதித்துவ முகமாக அவரையே மக்கள் பார்த்தனர். ஆனால், இப்போது கட்சித் தலைமையில் நிகழ்ந்திருக்கும் மாற்றத்தால் பெண்களுக்கு காங்கிரஸ் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் பொதுவெளியில் காட்ட வேண்டி இருக்கிறது. அதற்காக பல மாநிலங்களிலும் செக்வாக்குமிக்க பெண்களை மாநிலத் தலைவர்களாக நியமிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் அந்த வாய்ப்பை எனக்குத் தாருங்கள் எனக் கேட்டுத் திரும்பியிருக்கிறேன்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே இருக்கிறது. அதனால் எம்பி-க்கள் தங்கள் தொகுதிக்குள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. இதனால் சிட்டிங் எம்பி-க்களுக்கு மாநிலத் தலைவர் பதவி கொடுத்தால் அது தொகுதிக்குள் அவர்களின் பங்களிப்பை இல்லாமல் ஆக்கிவிடும் என்றெல்லாம் சொல்லி அரசியல் சூழலை விளக்கினேன்.

தமிழக காங்கிரஸ் கட்சியினர் மட்டத்தில் உங்களுக்கு ஆதரவு இருக்கிறதா?

பெரும்பான்மையான மாவட்ட, வட்டாரத் தலைவர்கள் அவர்களாகவே என்னை அழைத்து, “நீங்கள் மாநிலத் தலைவராக வந்தால் நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்” எனத் தெரிவித்தார்கள். கட்சியின் மூத்த தலைவர்களும் என்னால் நன்கு செயல்பட முடியும் என நம்புகிறார்கள். அவர்களின் வழிகாட்டுதல்படி நல்ல முறையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பேன். கே.எஸ்.அழகிரியும் சிறப்பாகவே செயல்பட்டார். மாற்றம் கட்டாயம் என தலைமை நினைக்கும்பட்சத்தில் அந்த வாய்ப்பை எனக்குத் தாருங்கள் என்பதுதான் என் கோரிக்கை!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை மக்கள் மத்தியில் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக நம்புகிறீர்களா?

லட்சக்கணக்கான மக்கள் ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். மதசார்பற்ற தன்மையுடன், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலரும் ராகுலின் நடைபயணத்தில் புத்துணர்வோடு பங்கேற்று வருகின்றனர். நடைபயணம் இந்திய அளவில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தின் முதல் அறிகுறிதான் இமாச்சலப் பிரதேசத்தின் வெற்றி! அதில் பிரியங்கா காந்தியின் உழைப்பும் ஈடுசெய்ய முடியாதது. இது கட்சியை அடுத்தகட்டம் நோக்கி நகர்த்தி உள்ளது.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

மனதின் ஆழத்தில் இருந்து சொல்லுங்கள்... தமிழகத்தில் பாஜக வளர்கிறது தானே?

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுகவைவிட திமுகவுக்கு எதிராக பாஜக தான் அதிகமாகக் குரல் கொடுக்கிறது. அதேசமயம், மக்கள் மத்தியில் தாங்களே திமுகவை இடித்துரைக்கும் உண்மையான எதிர்க்கட்சி என்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதெல்லாம் ஓட்டாக மாறுமா என்பது வரும் மக்களவைத் தேர்தலில்தான் தெரியும். அதுதான் பாஜகவின் வளர்ச்சியைக் காட்டும் உண்மையான தராசு. இப்போது நாம் எதையும் சொல்லிவிட முடியாது.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகி இருப்பது வாரிசு அரசியலின் நீட்சி என விமர்சனம் எழுந்துள்ளதே?

முதலில் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். வாரிசு அரசியல் என்பது இன்று தவிர்க்க முடியாதது. அதை வாரிசு அரசியல் என்று சொல்வதைவிட வாரிசுகள் தான் கட்சியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லக்கூடிய உழைப்பைத் தரமுடிகிறது. அதற்கான நிர்பந்தமும் அவர்களுக்குத்தான் இருக்கிறது.

அதேசமயம், சில கட்சிகளில் வாரிசு அரசியலுக்கு இடம் இல்லை. அது கட்சியின் தன்மைகளைப் பொறுத்தது. அதுவே, வாரிசாக இருந்துவிட்டு உழைக்காவிட்டால் அவர்களுக்கு வளர்ச்சி இருக்காது. உழைப்புதான் எவர் ஒருவரையும் உயர்த்திப் பிடிக்கும். மற்றபடி வாரிசு அரசியல் என்பதில் சாதகமோ, பாதகமோ இல்லை.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

குஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சியைத் தக்கவைத்திருப்பதற்கு காங்கிரஸின் பலவீனம் தானே காரணம்?

குஜராத்தில் 7-வது முறையாக பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் அங்கு படிப்படியாக உயர்ந்து கடந்தமுறை 77 எம்எல்ஏ-க்களைப் பெற்றது. பாஜகவுக்கு 99 எம்எல்ஏக்கள் இருந்தனர். கடந்த முறை 14 எம்எல்ஏ-க்கள் தான் பாஜகவை வீழ்த்தத் தேவைப்பட்டது. இந்தமுறை ஆட்சி அமைக்கும் சாத்தியக்கூறு இருந்தபோதும் ஆம் ஆத்மி கட்சி ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறது. அதாவது மக்கள் மன்றத்தில் டெல்லி, பஞ்சாப் போல் ஆட்சியை அமைத்து விடுவோம் என்னும் மாயத் தோற்றத்தை குஜராத்தில் விதைத்தனர்.

இதனால் மதசார்பற்ற காங்கிரஸின் வாக்கு வங்கியானது 182 தொகுதிகளிலும் சிதறிப்போனது. அதனாலேயே இம்முறை 57 எம்எல்ஏ-க்களை பாஜக கூடுதலாகப் பெற்றுவிட்டது. மாயத் தோற்றத்தை உருவாக்கிய ஆம் ஆத்மி 8 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால் மற்ற இடங்களில் அந்தக் கட்சி பிரித்த வாக்குகள் பாஜகவுக்கு சாதகமாக முடிந்துவிட்டது.

பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தான் தோற்றுள்ளனர். ஆம் ஆத்மி தவிர குஜராத்தில் காங்கிரஸின் தோல்விக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இரண்டாவது முறை பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியை தங்கள் மண்ணின் மைந்தராகப் பார்க்கும் குஜராத்திகளின் மன ஓட்டமே அது. அவர்களுக்கு மோடி மீது இருக்கும் மென்மையான அணுகுமுறையும் பாஜகவுக்கு பலம் சேர்த்துள்ளது.

விஜயதரணி
விஜயதரணி

ஆம் ஆத்மி மக்களவைத் தேர்தலையும் தனித்து சந்தித்தால் காங்கிரஸுக்கு தானே பாதகமாக முடியும்?

ஆம் ஆத்மி கட்சி கூட்டணிக்குள் வரத் தயாராக இல்லை. அதற்காக நாங்கள் எடுத்த முயற்சிகளும் வெற்றிபெறவில்லை. அவர்கள் தங்கள் தனித்துவத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக தனித்தே களம் காண்கிறார்கள். தனியாகப் போட்டியிட்டதால் தான் டெல்லி, பஞ்சாப்பில் வென்றதாகக் கணிக்கும் ஆம் ஆத்மி, அதையே பிற மாநிலங்களிலும் தொடர்கிறது. ஆனால், பெரிய மாநிலங்களில் அந்த ஃபார்முலா எடுபடாது. தனித்துப் போட்டியிட்டால் வாக்குப் பிரிப்புக்குத்தான் அது வழிவகுக்கும். அவர்கள் பிரிக்கும் வாக்குகள் காங்கிரஸ் கட்சியின் வெற்றிவாய்ப்பை பறிக்கிறது. அதனால் இப்போது பாஜகவைவிட ஆம் ஆத்மியைப் பார்த்தே காங்கிரஸ் பயப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.

நீங்கள் எதிர்பார்ப்பது போல் மாநிலத் தலைவர் பதவி கிடைத்தால் உங்கள் செயல்பாடு எப்படி இருக்கும்?

மாநிலத் தலைவர் பதவி கிடைக்கும்பட்சத்தில் தமிழகம் முழுவதிலும் இருக்கும் மாவட்டம், வட்டாரம் என அனைத்துப் பகுதிகளிலும் பணிகளை இன்னும் சிறப்பாக எடுத்துச் செல்வேன். அதிகமான பூத் கமிட்டிகள் அமைப்பதோடு, உண்மையான காங்கிரஸ் விசுவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் தலைவர்கள், எம்எல்ஏ, எம்பி-க்களின் ஆலோசனையோடு தமிழக மக்களை காங்கிரஸ் கட்சி நோக்கித் திரும்பிப் பார்க்க வைப்பேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in