எங்களுக்குப் பணம் வேண்டாம்… மகிழ்ச்சியாக வாழ விடுங்கள்: முன்னாள் முதல்வர் தந்த 2 லட்சத்தை தூக்கி எறிந்த பெண்ணால் பரபரப்பு

எங்களுக்குப் பணம் வேண்டாம்… மகிழ்ச்சியாக வாழ விடுங்கள்: முன்னாள் முதல்வர் தந்த 2 லட்சத்தை தூக்கி எறிந்த பெண்ணால் பரபரப்பு

கர்நாடகா மாநிலத்தில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையா வழங்கிய 2 லட்ச ரூபாயை பெண் தூக்கியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் கடந்த வாரம் கோரூர் நகரைச் சேர்ந்த ஒரு சமூகத்தின் இளைஞர்கள் சிலர், மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்களைக் கேலி செய்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறு வன்முறையில் முடிந்தது. இதனால் பல கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், சில கடைகள் தீ வைத்து எரிக்‍கப்பட்டன. இந்த மோதலில் பலர் படுகாயமடைந்தனர்.

இந்த நிலையில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா இன்று சந்தித்தார். அப்போது பாதிக்கப்பட்ட ஹனீப், ராஜேசாப், ரஃபீக், தவால் மாலிக் ஆகியோரிடம் அவர் நலம் விசாரித்தார். அத்துடன் அவர்களுக்கு 2 லட்சரூபாய் இழப்பீடுத் தொகையை வழங்கினார்.
அப்போது பாதிக்கப்பட்டவரின் உறவினரான பெண் ஒருவர், வழங்கப்பட்ட 2 லட்ச ரூபாயை சித்தராமையாவிடம் திருப்பித்தர முயற்சி செய்தார். ஆனால், அந்த பெண்ணை சித்தராமையா சமாதானம் செய்ய முயன்றதுடன் தனது வாகனத்தில் ஏறிச் செல்ல முயன்றார். ஆனால், அந்த பெண், பாதுகாப்பு வீரர்களின் வாகனத்தைப் பின் தொடர்ந்து வந்து, "எங்களுக்குப் பணம் வேண்டாம்., எங்களை மகிழ்ச்சியாக வாழ விடுங்கள்" என பணத்தைத் தூக்கி வீசினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in