நாம் தமிழர் கட்சியின் `பி’ டீம் பாஜக!- சீமான் சொல்லும் சீக்ரெட்!

நாம் தமிழர் கட்சியின் `பி’ டீம் பாஜக!- சீமான் சொல்லும் சீக்ரெட்!
சீமான்

சென்னை, பூந்தமல்லியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ‘இனப் படுகொலை நாள் மாபெரும் இன எழுச்சி பொதுக் கூட்டம்’ நடைபெற்றது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளனை நேற்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சீமான், “பேரறிவாளன் தன்னுடைய விடுதலைக்காக அவரே சட்டப் போராட்டம் நடத்தினார். அவரே விடுதலையைச் சாத்தியப்படுத்தினார். இந்த தீர்ப்பு அந்த வழக்கில் தொடர்புடைய எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரையும் தனித்தனியாகப் போராட வைக்காதீர்கள். என்னை வேலூர் சிறையில் அடைப்பதற்கு முன்புவரை, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் வேலூர் சிறையில்தான் இருந்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா? நான் வேலூர் சிறைக்குச் சென்ற பிறகுதான் என்னைப் பார்க்க வந்த 50,000 பேர் அவர்களையும் பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன் பிறகுதான் பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் இவ்வளவு ஆண்டுகாலமாகச் சிறையில் இருக்கிறார்கள் என்பதே வெளியில் தெரியவந்தது.

ஆம்பூரில் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி பிரியாணி விருந்துக்குத் தடை போடப்பட்டது. ஆனால் இந்தியாதான் மாட்டு இறைச்சிகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்கிறது. மாட்டுக் கறிக்குத் தடைவிதிப்பதை விட்டுவிட்டு, மாட்டுக்கறி ஏற்றுமதிக்கு மோடி தடை விதிப்பாரா?. நான் ஒரு வேலையைத் தொடங்கும் போது அனைவரும் விமர்சனம் செய்தார்கள். அதே வேலையை பாஜக கையிலெடுத்தபோது பாராட்டுகிறார்கள். பாஜக-தான் நாம் தமிழர் கட்சியின் ‘பி’ டீமாக செயல்பட்டு வருகிறது. மோடிக்கு நான் சொல்வது, என்னுடைய பாஸ்போர்ட் மீதான தடையை நீக்குங்கள். எங்கள் விடுதலைக்கான தொடக்கம் ஐ.நாவில் உள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in