`வழக்கைப் பார்த்து பயப்படபோவதில்லை'- கொந்தளித்த நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்

நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா
நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா `வழக்கைப் பார்த்து பயப்படபோவதில்லை'- கொந்தளித்த நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர்

"நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதற்காக ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் மீது மாறி மாறி வழக்குப்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். வழக்கைப் பார்த்து நாங்கள் பயப்பட போவதில்லை" என்று நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா ஆவேசத்துடன் கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தலில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் மேனகா தனது ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்து வருகிறார். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்பட 20 பேர் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 20-ம் தேதி ஆலமரத்தெருவில் அனுமதியின்றி தேர்தல் விதியை மீறி பரப்புரை மேற்கொண்ட புகாரியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சீமானுடன் வேட்பாளர் மேனகா
சீமானுடன் வேட்பாளர் மேனகா

இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, "தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. வாக்காளர்களுக்கு எல்லாவிதமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் இது குறித்து தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் சம்பந்தப்பட்ட கட்சியின் வேட்பாளரைத் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் மக்களை சந்திக்கப் போன என் மீது ஏன் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

நாங்க என்ன தப்பு செய்தோம். மக்களை சந்தித்து எங்கள் கொள்கையைத்தானே கொண்டு போய் சேர்க்கிறோம். நாங்கள் எந்த அத்துமீறலும் செய்யவில்லை. ஆளுங்கட்சினர் அத்துமீறி செயல்பட்டதாக கூறி பணிமனைகளை எல்லாம் தேர்தல் அதிகாரிகள் மூடி இருக்கிறார்கள். ஏதோ பண்ண வேண்டும் என்பதற்காக அந்த பத்து பணிமனைகளையும் மூடி இருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கப் போகிறது என்பதற்காக ஆளுங்கட்சியினர் நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் மீது மாறி மாறி வழக்குப்பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். வழக்கைப் பார்த்து நாங்கள் பயப்பட போவதில்லை" என்றார் ஆவேசத்துடன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in