`நாங்கள் மதவாதிகளுக்கு எதிரிகள்; மதத்திற்கு அல்ல'- அறிய வேண்டியவர்கள் அறியுங்கள் என முதல்வர் பேச்சு

`நாங்கள் மதவாதிகளுக்கு எதிரிகள்; மதத்திற்கு அல்ல'- அறிய வேண்டியவர்கள் அறியுங்கள் என முதல்வர் பேச்சு

"நாங்கள் மதவாதத்தின் எதிரிகளே தவிர, மதத்தின் எதிரிகள் அல்ல என்பதை இத்தகைய விழாக்களின் மூலமாக அறியவேண்டியவர்கள் அறிய வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சார்பில் 2500 திருக்கோயில்களில் திருப்பணிக்கு தலா 2 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் ஸ்டாலின், "அனைத்துத்துறையும் வளர்வது தான் திராவிட மாடல் வளர்ச்சி என்று நாங்கள் சொல்லி வருகிறோம். திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். நாங்கள் மதவாதத்தின் எதிரிகளே தவிர, மதத்தின் எதிரிகள் அல்ல என்பதை இத்தகைய விழாக்களின் மூலமாக அறியவேண்டியவர்கள் அறிய வேண்டும். அறிவார்கள் என நினைக்கிறேன்.

தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான ஆன்மிகப் பெரியவர்கள், அருள் நெறியாளர்கள் முன்னிலையில் திருக்கோயில்களுக்கான நிதியை அரசின் சார்பில் நான் வழங்கி இருக்கிறேன். கழக ஆட்சி மலர்ந்த பிறகு திருக்கோயில்களுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாகத் தான் இவை வழங்கப்படுகின்றன. தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 2021-2022-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளில் 91 அறிவிப்புகளின் மூலம் 3,769 திருக்கோயில்களில் திருப்பணிகளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

2022 – 2023-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் இடம் பெறாத அறிவிப்பு தான் இப்போது செயல்படுத்தப்படுகிறது. சொன்னதை மட்டுமல்ல,சொல்லாததையும் செய்வோம் என்று சொன்னேன் அல்லவா? அது இதுதான். திருவாரூரில் பல்லாண்டுகளாக ஓடாத தேரை ஓட்டினார் முதல்வர் கலைஞர். அப்போது தேர் வரும் பாதையைச் சுற்றிலும் சாலைகள் அமைக்கப்பட்டன. தேர் ஓடுவது சில நாட்கள் தான், ஆனால் மக்கள் 365 நாளும் நடந்து செல்லப் பயன்படுகிறது சாலைகள் என்று தந்தைப் பெரியாரை மேடையில் வைத்துக் கொண்டே முதல்வர் கலைஞர் சொன்னார்.

கோயில்கள் நமது கலைச் சின்னங்களாக, பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன. நமது சிற்பத் திறமைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன. நமது கலைத் திறமைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்திருக்கின்றன. எனவே தான் அதனை காப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். அத்தகைய கோயில்கள் சமத்துவம் உலவும் இடங்களாக அமைய வேண்டும் என்பதுதான் நமது முழுமுதல் கொள்கையாகும். எந்த மனிதரையும் ஜாதியின் பேரால் தள்ளி வைக்கக்கூடாது. அதற்குத் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தோம். அன்னைத் தமிழ் மொழி ஆலயங்களில் ஒலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டு இருக்கிறோம்.

சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும். மனிதர்களில் மட்டுமல்ல கோயில்களிலும் நகரக் கோயில், கிராமக் கோயில் என்றும் பணக்காரக் கோயில், ஏழ்மையான கோயில் என்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுகிறது. கிராமப் புறக் கோயிலாக இருந்தாலும், ஏழ்மையான கோயிலாக இருந்தலும், ஆதிதிராவிடர் பகுதியில் இருக்கும் கோயிலாக இருந்தாலும், அவற்றையும் ஆலயமாகவே கருதி, அதற்கு உதவி செய்யும் அரசு தான் இந்த திராவிட மாடல் அரசாகும். மதம், ஜாதி, வேற்றுமை மட்டுமல்ல, கோயில், சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. அனைத்து இறையியல் தலங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறோம். அதனால் தான் இம்மேடையில் அமர்ந்திருக்கும் சமயச் சான்றோர்கள் மட்டுமல்ல, பலரும் இந்த அரசை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார். உங்களது பாராட்டுகள் எங்களுக்கு உற்சாகம் அளிக்கும். நீங்கள் ஊக்கப்படுத்துங்கள். நாங்கள் எந்நாளும் உழைப்போம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in