144 தடையை உடைக்கும் ஆம் ஆத்மி... தொண்டர் படையுடன் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட கிளம்பினார் கேஜ்ரிவால்!

பாஜக தலைமை அலுவலகத்தை தொண்டர்களுடன் முற்றுகையிட செல்லும் அர்விந்த் கேஜ்ரிவால்
பாஜக தலைமை அலுவலகத்தை தொண்டர்களுடன் முற்றுகையிட செல்லும் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லியில் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி, பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட ஆம் ஆத்மி தலைவரும், முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் தொண்டர்களுடன் புறப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மலிவாலை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உதவியாளர் பிபவ்குமார் தாக்கியதாக கூறப்படும் வழக்கில், அவரை டெல்லி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் கேஜ்ரிவால் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வீடியோவாக தகவலில், “மோடி அவர்களே மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங், கேஜ்ரிவால் என ஒவ்வொருவராக கைது செய்து சிறை விளையாட்டை விளையாடி வருகிறீர்கள். இன்று எனது உதவியாளரை (பிபவ்குமார்) சிறையில் அடைத்துள்ளீர்கள்.

ராகவ் சத்தா லண்டனிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவரையும் சிறையில் அடைப்பார்கள் என கூறுகிறார்கள்.

எனவே, நான், எனது கட்சி எம்பி-க்கள், எம்எல்ஏ-க்களுடன் நாளை (இன்று) மதியம் பாஜக தலைமை அலுவலகத்துக்கு வருகிறேன். நீங்கள் ஒரே நேரத்தில் எங்களை சிறையில் அடைக்கலாம்.” என தெரிவித்திருந்தார்.

பாஜக தலைமை அலுவலகம் முன்பு திரண்டு போராட்டம் நடத்துவதற்கான அனுமதி, ஆம் ஆத்மி கட்சிக்கு போலீஸார் தரப்பிலிருந்து வழங்கப்படவில்லை. இந்நிலையில் பாஜக தலைமை அலுவலகம் உள்ள தீன் தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் டெல்லி போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் காரணமாக பாஜக தலைமையகத்தை நோக்கி எந்த எதிர்ப்பு போராட்டமும் அனுமதிக்கப்பட மாட்டாது.

இதற்கிடையே கூடுதல் டிசிபி (மத்திய) சச்சின் சர்மா தலைமையில் ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், கட்சி எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள், தொண்டர்களுடன் பாஜக அலுவலகத்தை நோக்கி பேரணியாக செல்ல துவங்கியுள்ளார். இதனால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in