`வேதா இல்லத்தை கைவிடுகிறோம்; ரூ.67.90 கோடியை திரும்ப பெறுகிறோம்'

நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
வேதா இல்லம்
வேதா இல்லம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கை கைவிடப்படுவதாகவும், 67 கோடியே 90 லட்சம் ரூபாய் டெப்பாசிட் தொகையை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என கடந்த அதிமுக அரசு அறிவித்திருந்ததோடு, அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையம் மற்றும் அங்குள்ள அசையும் சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று தீர்ப்பளித்தோடு, ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, திபக்கிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் அரசு செலுத்திய அபராத தொகையை பெற்றுக் கொள்ளும்படியும் தீபா, தீபக் தரப்பிற்கு அனுமதி வழங்கியது. இதனிடையே, சென்னை வருவாய் கோட்டாட்சியர் சார்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், வேதா இல்லத்தை கையகப்படுத்துவதற்காக இழப்பீடு நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் செலுத்தப்பட்ட 67 கோடியே 90 லட்சம் ரூபாய் டெப்பாசிட் தொகையை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும், வேதா இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கில் வருமான வரித்துறையின் பதில் தேவை என்பதால், வருமான வரித்துறை தரப்பு பதிலளிக்கும் வகையில் இந்த வழக்கின் விசாரணையை வரும் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in