தேனியில் நடைபெற்றது ஓபிஎஸ் ஏற்பாடு செய்த கூட்டமா?

மாவட்ட அதிமுக செயலாளர் செய்யது கான் பதில்
தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.
தேனியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதே நூறு சதவீத அதிமுக தொண்டர்களின் விருப்பம் என்று தேனி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.எம். செய்யது கான் நேற்று அதிரடியாக அறிவித்தது அதிமுகவுக்குள் பெுரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.


தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவரது பண்ணை வீட்டில் நேற்று நடைபெற்றது. இதில், தேனி மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம். செய்யது கான், முன்னாள் எம்பி-யான பார்த்திபன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் பலரும், “அதிமுக தொடர் தோல்வியில் இருந்து மீள வேண்டும் என்றால், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினர். இந்த கருத்தை தலைமையிடம் கொண்டு செல்வதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த நிலையில், “சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது பெரும்பான்மையான தொண்டர்களின் கருத்து இல்லை” என கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் அருண்மொழித்தேவன் எம்எல்ஏ இன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முடிவை அறிவிக்கும் செய்யது கான்...
முடிவை அறிவிக்கும் செய்யது கான்...

இதுகுறித்து தேனி மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.எம். செய்யது கானிடம் கேட்டதற்கு, “தேனி மாவட்டத்தைப் பற்றி அருண்மொழித்தேவனுக்கு என்ன தெரியும்? எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் பணியாற்றி வருகிறேன். தேனி மாவட்டத்தில் அதிமுகவுக்கு 650 கிளைகள் இருக்கின்றன. 513 வார்டுகளில் நிர்வாகிகள் உள்ளனர். நகர் செயலாளர் 6 பேர், ஒன்றிய செயலாளர் 9 பேர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பாக எடுக்கப்பட்ட முடிவு தான், சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது. இது தான் அதிமுகவில் உள்ள நூறு சதவீத தொண்டர்களின் உணர்வு” என்று கூறினார்.

“நேற்று நடந்தது, ஒற்றைத் தலைமையை வலியுறுத்த ஓபிஎஸ் ஏற்பாடு செய்த கூட்டம் என்று பேசப்படுகிறதே?” என்று அவரிடம் கேட்டதற்கு, ‘இரண்டுபட்டுக் கிடந்த அதிமுக ஒன்றானதற்குக் காரணம் ஓபிஎஸ் தான். இரட்டை இலை சின்னம் கிடைத்ததற்கும் அவர் தான் காரணம். எந்த காலத்திலும் நான் தான் அதிமுக தலைமை என்று அவர் பேசியது கிடையாது. ஆனால், நாங்கள் தான் அதிமுக தலைமை என்று கூறிக்கொண்டிருப்பவர்கள் தான் அருண்மொழித்தேவன் போன்றவர்களைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றனர்” காட்டமாகப் பதில் சொன்னார் கான்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in