திமுக வேட்பாளர் போட்டது கள்ள ஓட்டா?

திமுக வேட்பாளர் போட்டது கள்ள ஓட்டா?
வேட்பாளர் மஞ்சுளாதேவி

திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் போட்டியிட்ட, திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி செலுத்திய வாக்கு கள்ள வாக்கா என்று சர்ச்சை எழுந்திருக்கிறது.

திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மஞ்சுளாதேவி தனது வாக்கை செலுத்த திருச்சி கருமண்டபம் மாநகராட்சி தொடக்கப்பள்ளிக்கு வந்தார். வரிசையில் நின்று வாக்களித்தார். ஆனால், அவர் செலுத்தியது அவரது வாக்கு இல்லை. 647-ம் எண் வாக்குச்சாவடியில், வரிசை எண் 673-ல் உள்ள முத்துலெட்சுமி என்பவரது வாக்கை, கையெழுத்திட்டு தவறுதலாகப் பதிவிட்டுள்ளார்.

தவறுதலாக வாக்களித்தது தெரிந்ததும், பின்னர் அவர் 646-ம் எண் வாக்குச்சாவடிக்கு சென்று, வரிசை எண் 673-ல் உள்ள தனது வாக்கையும் பதிவு செய்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மஞ்சுளாதேவி கள்ளவாக்கு செலுத்தி இருப்பதாக மற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் வாக்குச்சாவடி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்காளர் முத்துலட்சுமி
வாக்காளர் முத்துலட்சுமி

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் தனது வாக்கைச் செலுத்த வாக்குச்சவடிக்கு முத்துலட்சுமி வந்தார். அவரது வாக்கை வேட்பாளர் மஞ்சுளாதேவி செலுத்தி இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து முத்துலட்சுமி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார். விசாரணை நடத்திய அலுவலர், அவருக்கு டெண்டர் ஓட்டு முறையில் வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்தார்.

மேலும், இரண்டு வாக்கை பதிவுசெய்த திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவியிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும், உண்மை நிரூபணமாகும்பட்சத்தில், 56-வது வார்டில் வேட்பாளர் பட்டியலில் இருந்து அவர் நீக்கம் செய்யப்படுவார் என உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குறுதி அளித்தார்.

Related Stories

No stories found.