
சமீபத்தில் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்களித்தால், 25 கோடி ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதாக ராஜஸ்தான் அமைச்சர் ராஜேந்திர குதா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு மாறிய இவர், 2020ல் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிரான கிளர்ச்சியின் போது இதேபோல் தனக்கு ரூ.60 கோடி வழங்கப்படும் என கூறப்பட்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இரண்டு சலுகைகளையும் தான் நிராகரித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது எந்த தலைவரையோ அல்லது கட்சியையோ அவர் குறிப்பிடவில்லை.
ஜுன்ஜுனுவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த நிகழ்வில் பேசிய ராஜஸ்தானின் ராணுவ வீரர்கள் நலத்துறை இணை அமைச்சர் ராஜேந்திர குதா, ” மாநிலங்களவை தேர்தலில் எனது வாக்கை ஒருவருக்கு செலுத்த 25 கோடி ரூபாய் தருவதாக என்னிடம் கூறப்பட்டது. நான் என் மனைவியிடம் கேட்டேன், அவர் நமக்கு நன்மதிப்புதான் தேவை என்று கூறினார். கெலாட் அரசுக்கு 2020ல் எழுந்த அரசியல் நெருக்கடியின் போது, எனக்கு 60 கோடி ரூபாய் வழங்குவதாக சொல்லப்பட்டது. என் குடும்பத்தாரிடம் பேசினேன். எனது மனைவி, மகன் மற்றும் மகள் நன்மதிப்பினையே விரும்புகிறோம், பணத்தை அல்ல என்று கூறினார்கள்" என்று தெரிவித்தார்
2018 சட்டமன்றத் தேர்தலில் பகுஜன் சமாஜ் வேட்பாளர்களாக வெற்றிபெற்று 2019 இல் காங்கிரஸில் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களில் குதாவும் ஒருவர். ஜூலை 2020ல் சச்சின் பைலட்டும் மற்ற 18 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் கிளர்ச்சி செய்தபோது இவர் கெலாட் முகாமில் இருந்தார். இதனைத் தொடர்ந்து 2021 நவம்பரில் நடைபெற்ற அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, குதா மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கான பேரம் பேசப்பட்டு பாஜக தனது அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். இந்த சூழலில் ஜூன் மாதம் ராஜஸ்தானின் நான்கு இடங்களுக்கு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில், சுயேட்சை வேட்பாளரும், ஊடக அதிபருமான சுபாஷ் சந்திராவை பாஜக ஆதரித்தது. கடும் போட்டிக்கு பின்னர் சந்திரா தோல்வியடைந்தார். மாநிலத்தில் இருந்து ஆளும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மூவரும், பாஜக வேட்பாளர் ஒருவரும் ராஜ்யசபா எம்.பியாக வெற்றி பெற்றனர்.