பாஜகவைச் சேர்ந்த நடிகை சோனாலி பலாத்காரம் செய்து கொலை?: பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

பாஜகவைச் சேர்ந்த  நடிகை  சோனாலி பலாத்காரம் செய்து கொலை?: பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி

ஹரியாணாவைச் சேர்ந்த பாஜக நிர்வாகியான நடிகை சோனாலி போகட் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. அதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

ஹரியாணா மாநிலம் பாட்டேஹாபாத் மாவட்டம் பூத்தன் காலன் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனாலி போகத்(42). இவர், 8 ஆண்டுகளுக்கு முன் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி டிவியின் தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார். மாடலாகவும், வெப் தொடரிலும் நடித்துள்ளார். 2020-ம் ஆண்டிற்கான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். அத்துடன் சமூகவலைத்தளங்களில் பரபரப்பாக இயங்கி வந்தார்.

மேலும், பாஜகவில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 22-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்ற சோனாலி போகட் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சோனாலி போகட் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சோனாலி போகட் மரணம் தொடர்பாக அவரது குடும்பத்தினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.

சோனாலி மரணமடைவதற்கு ஒருமணிநேரத்திற்கு முன்பாக தன்னுடைய தாயாருக்கு போன் செய்து, ‘எனக்கு எதிராக ஏதோ சதி நடக்கிறது. சாப்பிட்ட பிறகு அசௌகரியமாக உணர்கிறேன்’ என்று பேசியதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சோனாலி போகட்டின் சகோதரர் ரிங்கு தத்தாவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். சோனாலி போகட் மரணமடைவதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு, தனது தாயார், சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் ஃபோனில் பேசினார் என்று அவரது சகோதரர் ரிங்கு தத்தா கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “உதவியாளர் சுதிர் சங்வான் போதை மருந்து கலந்த உணவைத் தனக்கு கொடுத்து விட்டார். பின்பு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து வைத்து கொண்டு மிரட்டுகிறார். அதனைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி விடுவேன் என்றும் அச்சுறுத்துகிறார். எனது அரசியல் மற்றும் நடிப்புத் தொழிலை அழித்து விடுவேன் என சுதிர் சங்வான் மிரட்டுகிறார். எனது செல்ஃபோன்கள், சொத்துப் பதிவுகள், ஏடிஎம் அட்டைகள் மற்றும் வீட்டு சாவிகளையும் பறித்து வைத்து உள்ளார்” என்று சோனாலி போகட் தெரிவித்ததாக ரிங்கு புகார் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சோனாலி போகட்டின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் உடற்கூராய்வு பரிசோதனை கோவாவில் நடைபெற்றது. இந்த ஆய்வில் தான், தற்போது சோனாலி போகத்தின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கொலை வழக்காக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சோனாலி போகட்டின் சகோதரர் ரிங்கு தத்தா கொடுத்த புகாரின் பேரில், சோனாலியின் உதவியாளர்களான சுதீர் சக்வான் மற்றும் சுக்விந்தர் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், எனவே இந்த கொலைக்கு பின்னணி என்ன என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. மேலும் நடிகையும், பாஜக பிரமுகருமான சோனாலி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணையை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in