பங்கீடு விஷயத்தில் பணியவைத்ததா திமுக?

கூட்டணிக் கட்சிகள் குமுறுவதன் பின்னணி என்ன?
பங்கீடு விஷயத்தில் பணியவைத்ததா திமுக?

‘வானவில் கூட்டணி’ என்றழைக்கப்படும் திமுக கூட்டணி மீண்டும் ஒரு முறை தேர்தல் உடன்பாட்டை வெற்றிகரமாக (!) முடித்திருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளுக்குப் பெயரளவுக்கு இடங்களைக் கிள்ளிக் கொடுத்துவிட்டு 10,000-க்கும் அதிகமான இடங்களை அள்ளிக்கொண்டிருக்கிறது திமுக. இந்த இடப்பங்கீட்டை வெற்றிகரமாக முடிக்க திமுக சகல உத்திகளையும் கையாண்டிருக்கிறது என்பதுதான் இதில் கவனிக்கத்தக்க விஷயம்!

குமுறும் கூட்டணிக் கட்சிகள்

மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பதோ, உடன்பாடு ஏற்படுத்திக்கொள்வதோ பெரிய காரியமில்லை. கட்சிகளின் தலைமை பேசி இடப்பங்கீட்டைச் சுமூகமாக முடித்துக்கொள்ளும். ஆனால், ஆயிரக்கணக்கான இடங்களுக்குத் தேர்தல் நடக்கும் உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டணி அமைப்பதோ, அதைத் தக்கவைத்துக்கொள்வதோ இமாலய சாதனை. திமுக அதை சாமர்த்தியமாகவே செய்துகாட்டியிருக்கிறது. 21 மாநகராட்சி. 138 நகராட்சி, 490 பேரூராட்சி என மொத்தம் 12,893 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற உள்ள இத்தேர்தலில், மாவட்ட அளவில், தான் நினைத்தபடியே இடப்பங்கீட்டை முடித்திருக்கிறது திமுக தலைமை. ஆனால், கூட்டணிக் கட்சிகள் எல்லாமும் மனத்தாங்கலோடுதான் இடப்பங்கீட்டை ஏற்றுக்கொண்டிருக்கின்றன என்பது அக்கட்சிகளின் நிர்வாகிகளின் பேச்சில் எதிரொலிக்கிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே திமுக கூட்டணியில் புகைச்சல் கிளம்பத் தொடங்கிவிட்டது. பேச்சுவார்த்தைகள் மாவட்ட அளவில் நடத்துவது என முடிவுசெய்து அறிவித்திருந்தாலும், தேர்தலுக்கு முன்பே ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள வார்டில் யார் வேட்பாளர் என்பது வரை திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் முடிவுசெய்துவிட்டார்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் வரை கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளில் எத்தனை இடம் என்பதுகூட தெரியாமல் அக்கட்சிகள் தவித்துக்கொண்டிருந்தன. தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் பேச்சுவார்த்தைக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டணியில் உள்ள கட்சிகள் எதுவும் தங்களைவிட்டுப் போகாமல் கொடுக்கும் இடங்களை வாங்கிக்கொள்ளும் என்று கருதும் திமுக, பேரம் பேசி வாங்கும் அளவுக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு வலு இல்லை என்பதால் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டதாக உடன்பிறப்புகளே சிலாகிக்கிறார்கள்.

அவ்வளவுதான் தர முடியும்!’

மாவட்டங்களில் திமுக அமைச்சர்கள் / மாவட்டச் செயலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒவ்வொரு கட்சியின் மாவட்டத் தலைவர்கள் அல்லது செயலாளர்களை அழைத்தபோதே, ‘உங்கள் கட்சிக்கு இத்தனை வார்டுகள்தான். என்ன வார்டு உங்களுக்கு வேண்டுமோ அதை வாங்கிக்கொள்ளுங்கள். மற்றவர்களுக்காக இந்த வார்டு, அந்த வார்டு எனக் கேட்க வேண்டாம்’ என்று எடுத்த எடுப்பிலேயே அதிரடியாகப் பேசி பிற கட்சி மாவட்டத் தலைவர்களை ஆஃப் செய்துவிட்டார்கள்’ என்கிறார்கள் உடன்பிறப்புகள். கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களைக் கேட்டு டிமாண்ட் செய்தது. செல்வாக்கான இடங்களில் 10 சதவீத இடங்களுக்கு அதிகமாகவும் மற்ற இடங்களில் 7 முதல் 10 சதவீத இடங்களையும் கேட்டு காங்கிரஸ் மல்லுக்கட்டிப் பார்த்தது. ஆனால், பெரும்பாலான இடங்களில் தங்களுக்கோ, தங்கள் குடும்பத்தினருக்கோ வார்டுகளைக் கமுக்கமாகக் கேட்டு வாங்கிக்கொண்ட காங்கிரஸ் பிரமுகர்கள், திமுக குறைந்த இடங்களையே ஒதுக்கியபோதும் எந்தக் கேள்வியும் கேட்காமல் அமைதியாகிவிட்டார்கள் என்று கொந்தளிக்கிறார்கள் கதர்ச்சட்டைகள்.

கே.என்.நேரு
கே.என்.நேரு

இதுகுறித்து திருச்சியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். “திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் 10 வார்டுகளை நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு காங்கிரஸ் கட்சிக்கு 4 விரல்களை விரித்துக்காட்டி, காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களை வழிக்குக் கொண்டு வந்துவிட்டார். இத்தேர்தலுக்காக அமைக்கப்பட்ட தேர்தல் பணிக் குழுதான் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், மாவட்டத் தலைவர்கள் வேண்டியதை வாங்கிக்கொண்டு அமைதியாகிவிட்டார்கள்” என்றார் அந்த நிர்வாகி. மேலும், “கடந்த காலத்தில் திருச்சி மாநகராட்சி மேயர் பொறுப்பு காங்கிரஸ் கட்சியிடம்தான் இருந்தது. அப்போது குறைந்தபட்சமாக 10 வார்டுகள் வரை போட்டியிட்டோம். அதே அளவுக்குத் தர வேண்டும் என்று கேட்டுப் பார்த்தோம். ஆனால், கடைசியில் திமுக நினைத்துதான் நடந்தது” என்று அவர் பொருமுகிறார். நீண்ட களேபரத்துக்குப் பிறகு காங்கிரஸுக்கு 5 வார்டுகளை ஒதுக்கி அதிருப்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது திமுக!

உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாமே!’

காங்கிரஸ் மத்தியில் இப்படி புலம்பல் என்றால், மதிமுகவினரை வேறு வகையில் திமுக நிர்வாகிகள் அணுகியதாகக் கூறப்படுகிறது. கடந்த மக்களவை, சட்டப்பேரவை என இரு பொதுத் தேர்தல்களிலும் திமுக கட்சி சின்னமான உதயசூரியனில் மதிமுக வேட்பாளர்கள் களமிறங்கினர். அதன் நீட்சியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்கும்படி திமுக நிர்வாகிகள் வற்புறுத்தியதாகச் சொல்கிறார்கள் மறுமலர்ச்சி தோழர்கள். இதுதொடர்பாக தென் மாவட்டத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசினார்.

“ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர், 3 வார்டுகளை மதிமுகவுக்கு ஒதுக்கினார். கொடுத்துவிட்டு 2 இடங்களுக்கு மட்டுமே எங்களிடம் ஒப்பந்தம் போட்டார். இதுபற்றி மதிமுகவினர் திமுக மாவட்டச் செயலாளரிடம் கேட்டபோது, ‘ஓரிடத்தில் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயிக்கலாமே’ எனக் கூறினர். இது சரிப்பட்டு வராது. உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்குப் பதிலாக எங்களால் தனியாகவே நிற்க முடியும் என்று பதிலளித்தோம். பின்னர்தான் ஒருவழியாக ஒப்பந்தம் கையொப்பமானது. எங்களை மட்டுமல்ல, கீழக்கரை நகராட்சியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு முஸ்லிம் லீக், விசிக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகளிடமும் கூறி உள்ளார்கள்'' என்கிறார் அந்த மதிமுக நிர்வாகி.

தமிழகத்தின் பல இடங்களிலும் மதிமுகவினரிடம் இப்படித்தான் திமுக நிர்வாகிகள் பேசியதாகச் சொல்கிறார்கள். இதுகுறித்து புகார்கள் வந்த பிறகுதான் மதிமுக தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி, அதை முடிவுக்குக் கொண்டுவந்ததாகவும் மதிமுகவில் சொல்கிறார்கள்.

ஒதுக்கீட்டிலும் சிக்கல்கள்

இதுபோலவே விசிக, இடதுசாரிகளுக்கு திமுக ஒதுக்கும் வார்டுகளில் சிக்கல் ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வார்டு வாரியாக திமுக கூட்டணி பெற்ற வாக்குகளை வைத்துதான் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், தங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதப்படும் இடங்களை திமுக மா.செ-க்கள் கூட்டணி கட்சிகளுக்குத் தள்ளிவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. சட்டப்பேரவைத் தேர்தலில் குறைவான இடங்களை ஒதுக்கிய திமுக, உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை ஒதுக்குவதாகக் கூறியிருந்தது என்றும் ஆனால், அதன்படி திமுக நடக்கவில்லை என்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அதிருப்தி தெரிவித்தது. இந்தக் காரணத்தால் புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் திமுகவுடன் இக்கட்சி கூட்டணியை முறிக்கும் நிலை ஏற்பட்டது.

விரிசல் ஏற்படவில்லை

திமுக கூட்டணியில் இப்படி ஒரு சில அதிருப்திகள், மன வருத்தங்கள் ஏற்பட்டாலும், கூட்டணியில் பெரிய விரிசல் ஏற்படவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணியை வெற்றிகரமாகவே திமுக தொடர்கிறது. மொத்தம் உள்ள 12,893 உள்ளாட்சிப் பதவிகளில் 12 முதல் 15 சதவீதம் வரை கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. எஞ்சிய இடங்களில் போட்டியிடுவதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் திமுக களமிறங்குகிறது. தொடக்கத்தில் இருந்தே 10 ஆயிரம் இடங்களுக்குக் கீழே குறையக் கூடாது என்று மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களிடம் திமுக தலைமை அறிவுறுத்தியிருந்தது. அதன்படியே தற்போது திமுக நடத்திக்காட்டியிருக்கிறது. அதேவேளையில் கூட்டணிக்கும் பங்கம் வராமலும் திமுக பார்த்துக்கொண்டிருக்கிறது.

மாவட்ட அளவில் நடந்த பேச்சுவார்த்தை எல்லாமே வார்டுகள் பங்கீடுக்காக மட்டுமே. இடப்பங்கீடு தொடர்பாக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை கே.எஸ்.அழகிரி, முத்தரசன், திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்டோர் சந்தித்து பேசியபோதே, மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகள் குறித்தும் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால், “மேயர், நகராட்சித் தலைவர் பதவிகளைப் பங்கீடு செய்வதை எல்லாம் தேர்தல் முடிவு வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று ஒரே பேச்சில் திமுக தலைமை முடித்துவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தல் முடிவுக்குப் பிறகு, பெரும்பான்மையாக உள்ள மாநகராட்சி, நகராட்சிகளைத் தங்களுக்கு திமுக ஒதுக்குமா என்ற சந்தேகமும் கூட்டணி கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைவர், துணைத் தலைவர் பதவிகளை சொன்னபடி திமுக ஒதுக்கவில்லை என்று திமுக - காங்கிரஸ் இடையே அறிக்கைப் போர் ஏற்படும் அளவுக்கு பிரச்சினை அக்கப்போரானது. வார்டுகள் பங்கீடோடு இது முடிந்து போவதில்லை. மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் பதவிகளைப் பங்கீடு செய்வதிலும் திமுக கூட்டணி கட்சிகள் சவால்களைச் சந்திக்க நேரிடலாம். ஆனால், 2018-ல் அமைந்த திமுக கூட்டணியை, அடுத்ததாக 2024 மக்களவைத் தேர்தல் வரை அப்படியே கொண்டு செல்லும் எண்ணத்தில் திமுக தலைமை உள்ளது. இன்றைக்கு இருக்கும் சூழலில், கூட்டணிக் கட்சிகளும் திமுகவோடு சேர்ந்து பயணிக்கவே விரும்புகின்றன. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in