'செருப்பு வேண்டுமா சிண்ட்ரெல்லா?’: புகைப்படத்துடன் தெறிக்க விட்ட நிதியமைச்சரின் ட்விட்

'செருப்பு வேண்டுமா சிண்ட்ரெல்லா?’: புகைப்படத்துடன் தெறிக்க விட்ட நிதியமைச்சரின் ட்விட்

காரை நோக்கி வீசப்பட்ட செருப்பை என் உதவியாளர் பத்திரமாக எடுத்து வைத்துள்ளார். அதை வீசிய சிண்ட்ரெல்லா வந்து வாங்கிட்டு போகலாம் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அந்த செருப்பு படத்துடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் வீர மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்பதற்காக மதுரை விமான நிலையத்தில் அக்கட்சியினர் கூடியிருந்தனர். அப்போது அங்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பாஜகவினரை வெளியேற்ற உத்தரவிட்டார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்திவிட்டு செல்லும் வழியில் பழனிவேல் தியாகராஜன் காரை பாஜகவினர் முற்றுகையிட்டனர். அப்போது கார் மீது பாஜக மகளிர் நிர்வாகிகள் காலணியை வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த பழனிவேல் தியாகராஜன், பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் குறித்து பேச விரும்பவில்லை. அதற்கு இது சரியான தருணம் இல்லை. இது போன்ற அரசியல் செய்பவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றார்.

இந்த சம்பவம் நடைபெற்ற நேற்று நள்ளிரவு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் வீட்டுக்கு சென்ற பாஜக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன், நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டார். பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்நிலையில், தனது கார் மீது வீசப்பட்ட செருப்பை இணைத்து பழனிவேல் தியாகராஜன் ட்விட் வெளியிட்டுள்ளார். அதில், நேற்றைய நிகழ்வுகளைப் பற்றி நான் பின்னர் கூறுவேன், ஆனால் இப்போதைக்கு. பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு சில நூறு மீட்டர்களுக்கு தனது கட்சி உறுப்பினர்களுடன் அனுமதிக்கப்பட்ட காணாமல் போன ‘ பழைய விமான முனையத்தின் சிண்ட்ரெல்லா தனது செருப்பு மீண்டும் வேண்டும் என நினைத்தால், அவருக்காக எனது உதவியாளர் அதனை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார்’ என பதிவிட்டுள்ளார்.

உலக புகழ்பெற்ற சிண்ட்ரெல்லா கதை சிறுவர்களைக் கவர்ந்தது. குழந்தைகளைக் கவரும் வகையில், கார்டூனாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. சிண்ட்ரெல்லா என்ற சிறுமிக்கு தேவதை வழங்கிய செருப்பு தொலைந்து விடும். இந்த புகழ் பெற்ற கதையின் கேரக்டரை வைத்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்துள்ள ட்விட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in