`அதை எப்படி மறக்க முடியும்?'- ஓபிஎஸ் அழைப்பால் கொந்தளிக்கும் ராஜன் செல்லப்பா

செய்தியாளர்களை சந்தித்த வி.வி. ராஜன் செல்லப்பா
செய்தியாளர்களை சந்தித்த வி.வி. ராஜன் செல்லப்பா

"எடப்பாடியாரை அழைக்க ஓபிஎஸ்சுக்கு எந்த தகுதியும் கிடையாது. திமுகவுடன் தொடர்புள்ள ஓபிஎஸ்சிடம் கசப்பை மறந்து எப்படி ஒன்று சேர முடியும்" என்று அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராஜன் செல்லப்பா, "எடப்பாடியாருக்கு வலிமைமிக்க தீர்ப்பினை, கழகத் தொண்டர்கள் ஏற்கெனவே வழங்கி விட்டனர். அது மட்டுமல்ல, அவருக்குப் பின்னால் 63 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். மேலும், 2 ஆயிரத்து 663 பொதுக்குழு உறுப்பினர்களில், அதிக மெஜாரிட்டியில் எடப்பாடியாரை இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்தனர்.

கசப்பை மறக்க வேண்டும் என்று ஓபிஎஸ் கூறுகிறார். ஆனால், திமுகவுடன் தொடர்பு வைத்தவர்களை எப்படி மறக்க முடியும்? இதுவரையும் ஓபிஎஸ்சை ஆதரிக்கிறோம் என்று யாரும் சொல்லவில்லை. இன்றைக்கு எடப்பாடியார் பின்னால் ஆடாமல், அசையாமல், வலுவோடு இந்த இயக்கம் உள்ளது. மிகச்சிறந்த, திமுகவை எதிர்க்கக்கூடிய தலைமையாக எடப்பாடியார் தலைமை உள்ளது.

ஓபிஎஸ் எடப்பாடியாரை அழைக்கிறார். அவருக்கு அழைக்க எந்த தகுதியும் இல்லை. அவர் அழைத்தது தவறு. அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார். திமுகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு தெரிவிக்கிறார். ஆனால், நாங்கள் திமுகவை எதிர்க்கிறோம். நாங்கள் எப்படி ஒன்று சேர முடியும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "கூட்டுத் தலைமை என்று ஓபிஎஸ் கூறுகிறார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டன. எனவே, யாரும் கூட்டுத் தலைமையை விரும்பவில்லை. இரட்டைத் தலைமையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் யாரும் இல்லை.

எப்பொழுது எல்லாம் தீர்ப்பு தனக்கு சாதகமாக வருகிறதோ, அப்போது எல்லாம் ஓபிஎஸ் தென் மாவட்டங்களுக்கு வருகிறார். இதன் மூலம் தென் மாவட்ட பகுதிகளை உரிமை கொண்டாட முயற்சி செய்கிறார். தென் மாவட்டம் என்பது ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது. இங்கு ஓபிஎஸ்சுக்கு தனி செல்வாக்கு என்பது கிடையாது.

ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டுக்கு சொந்தக்காரராக எடப்பாடியார் உள்ளார். நிச்சயம் வெற்றி பெற்று இந்த இயக்கத்தின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடியார் வருவார். எங்களின் தலைமையாக திகழும் எடப்பாடியாரின் கட்டளை ஏற்று, தொடர்ந்து கழகப் பணியில் நாங்கள் செயல்படுவோம்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in