நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை: 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு துப்பாக்கி ஏந்திய 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,820 வார்டு கவுன்சிலர் பதவியிடங்களுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இறுதி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தமாக 60.70% வாக்குகள் பதிவானது. பேரூராட்சியில் 74.68 சதவீதம், நகராட்சியில் 68.22 சதவீதம், மாநகராட்சியில் 52.22 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேநேரம் சென்னையில் 43.59 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூம் அருகே துப்பாக்கி ஏந்திய போலீஸார், அதற்கடுத்து 2வதாக வாக்கு எண்ணும் மைய வளாகத்தில் சட்டம், ஒழுங்கு போலீஸார், 3வதாக வாக்கு எண்ணும் மையத்தின் வெளியே போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்ட அறையில் வெப் கேமரா மூலம் 24 மணி நேரமும் போலீஸார் மற்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதற்காக காவல் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் மற்றொன்று தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறை என இரண்டு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையை தவிர அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள 268 வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களின் உள் மற்றும் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் 30 ஆயிரம் போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, விருகம்பாக்கம் மீனாட்சி பொறியியல் கல்லூரி, பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி என மொத்தம் 11 வாக்கு எண்ணும் மையங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தாம்பரம், ஆவடி மாநகர காவல் எல்லைகளில் 4 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுபாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வாக்கு எண்ணும் மையங்கயில் சுழற்சி முறையில் 7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. அதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்ட இயந்திரம் சீல் அகற்றப்பட்டு, அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் அங்குள்ள வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும். காலை 9 மணி முதல் வேட்பாளர்களின முன்னணி நிலவரம் தெரியவரும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in