
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் 70 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் தொடங்கியது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் அறிவித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில் கடந்த 7-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேச சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் போட்டி நடக்கிறது. பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் செய்தனர். நேற்று முன்தினம் மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
இந்நிலையில், இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 5.6 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.
தேர்தலை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், சத்தீஸ்கரில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாவோயிஸ்ட் பாதிப்பு அதிகம் உள்ள 20 தொகுதிகளில் முதற்கட்டமாக கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.
மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதி நடந்தபோது, சில இடங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட சிலர் காயமடைந்தனர். வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்துவதைத் தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 3-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.