`21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றும்'- வாக்களித்த பின் முதல்வர் உறுதி

மனைவியுடன் முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார்
மனைவியுடன் முதல்வர் ஸ்டாலின் வாக்களித்தார்

"அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் செய்ய முடியும். வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றும்" என்று வாக்களித்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.

தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்கை பதிவு செய்து விட்டு காரில் புறப்பட்டுச் சென்றார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கை பதிவு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், "அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளின் மூலம்தான் செய்ய முடியும். வாக்குரிமை உள்ள அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். 21 மாநகராட்சிகளை திமுக கைப்பற்றும்" என்று கூறினார்.

நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்
நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்

சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாடியில் பாஜக செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, ``ஓட்டு போடுவது அனைவரது கடமை. எல்லா மக்களும் வெளியே வந்து ஓட்டுப் போட முன்வர வேண்டும். யாருமே எங்களுக்கு வேலை செய்யவில்லை. எங்களை பார்க்கவில்லை என்று குறை சொல்வதைவிட யார் ஜெயிக்க வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஜனநாயக ரீதியாக உரிமையை விட்டுக் கொடுக்காமல் மக்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும். தனித்துப் போட்டியிடுவது தப்பு இல்லை. எங்களுக்கு தைரியம் இருக்கிறது, வெற்றி வாய்ப்பை பொருத்திருந்து பார்ப்போம்" என்றார்.

திருச்சி கிராப்பட்டியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், புதுக்கோட்டையில் ரகுபதி, சென்னையில் டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை அமைச்சர் பிரபாகர், சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் ஆகியோர் வாக்களித்தனர். “அனைவரும் கண்டிப்பாக வாக்கு அளிக்க வேண்டும். வாக்கு பதிவு நிலவரம் தொடர்ந்து பதிவு செய்யப்படும்” என்று ககன்தீப் சிங் பேடி கேட்டுக் கொண்டார்.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழகத்தில் எனது வாக்கை செலுத்துவதில் பெருமை அடைகிறேன். அதேபோன்று உள்ளாட்சித் தேர்தல் முக்கியமானது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முக்கியமல்ல. நாம் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். எல்லோரும் ஓட்டு போடுங்கள். உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட வேண்டும். தெலுங்கானாவில் பழங்குடியினர் நடத்தக்கூடிய யாத்திரையில் கலந்து கொள்ளவேண்டும். இருந்தாலும் முதல் ஆளாக எனது வாக்கை இங்கு பதிவு செய்து இங்கிருந்து புறப்படுகிறேன்" என்று கூறினார்.

திருச்சி தில்லைநகரில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் கே.என்.நேரு தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை வள்ளூவர் கோட்டம் பத்மஷேசாத்ரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தனது வாக்கை பதிவு செய்தார்.

மாநகராட்சி பகுதியில் 1,369 வார்டுகள், நகராட்சி பகுதியில் 3,824 வார்டுகள், பேரூராட்சி பகுதியில் 7,408 வார்டுகள் என மொத்தம் 12,601 வார்டுகளுக்கு தற்போது வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

வாக்களித்த குஷ்பு
வாக்களித்த குஷ்பு

தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவுக்கு 1 லட்சத்து 6 ஆயிரம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுள்ளன. இந்த தேர்தலில் சுமார் 2½ கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.

மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இதர வாக்காளர்கள் மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வந்து விட வேண்டும் என வாக்காளர்களை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 22-ந் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in