மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலம்: குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

மோடி, அமித்ஷாவின் சொந்த மாநிலம்: குஜராத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் மாநிலத்தில் முதல் கட்டமாக 89 தொகுதிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த ஊர் என்பதால் இந்த தேர்தல் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

182 இடங்களை கொண்டுள்ள குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. 15 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி நடத்தி வரும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்குத்தான் நேரடி போட்டி ஏற்பட்டிருந்தது. தற்போது, அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் களம் புகுந்து மும்முனை போட்டி நிலவுகிறது.

முதல் கட்ட தேர்தல் 19 மாவட்டங்களில் அமைந்துள்ள 89 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் பா.ஜ.க.வும், காங்கிரஸும் தங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. 88 தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 788 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்களில், 339 பேர் சுயேச்சை வேட்பாளர்கள். 70 பேர் பெண் வேட்பாளர்கள். குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சொந்த மாநிலம் என்பதால் இருவரும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

மேலும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, அரவிந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் செய்தனர். முக்கிய வேட்பாளரான கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ளார். தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2-ம் கட்டத் தேர்தல் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in