
பெரியகுளத்தில் ஈபிஎஸ் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில் தனது அனுமதியின்றி தன்னுடைய புகைப்படத்தைப் போட்டுள்ளதாக கூறி அதிமுக தொண்டர் ஒருவர், தன்னுடைய புகைப்படத்தின் மீது செய்தித்தாள்களை ஒட்டி, அதை மறைத்துள்ள சம்பவம் அதிமுக நிர்வாகிகளையும், அந்த பகுதியில் உள்ள அதிமுகவினரிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரையில் வரும் 20ம் தேதி அதிமுக பொன்விழா மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டையொட்டி பெரியகுளம் புதிய பேருந்து நிலைய பகுதியில் ஈபிஎஸ் அணி சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது அனுமதியின்றி தன்னுடைய புகைப்படமும், தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் பேனரில் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அதனை செய்தித்தாள் ஒட்டி மறைத்துள்ளார் அதிமுக தொண்டர் நாராயணசாமி.
அதிமுக ஓபிஎஸ்- ஈபிஎஸ் என இரண்டாக பிரிந்த பிறகு அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படம் பேனரில் வைக்கப்பட்டுள்ளதாக நாராயணசாமி என்ற அதிமுக தொண்டர் குற்றம் சாட்டியிருக்கிறார்.