ஒன்றிணைவோம் என்ற சசிகலா: பதிலடி கொடுத்த ஜெயக்குமார்!

சசிகலா
சசிகலா

"பிளவுகளைக் கடந்து நிச்சயம் அதிமுக ஒன்றிணைந்து, அம்மாவின் ஆட்சியை உருவாக்கும்" என்று சசிகலா கூறினார்.

திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாயத்தேவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்த சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "புரட்சித்தலைவர் அதிமுகவை தொடங்கிய குறுகிய காலத்திலயே திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் மாயத்தேவர் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டு இரட்டை இலை சின்னத்தில் சுயேச்சை நின்று வெற்றி பெற்றவர். கழகத்தின் முதல் வெற்றிக்கு சொந்தக்காரர். அவருடைய இழப்பு ஈடு செய்ய இயலாதது. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த செல்கிறேன்" என்றார்.

தொடர்ந்து, தற்போதைய அதிமுகவில் உள்ள பிளவுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு திமுகதான் காரணம். திமுகதான் பின்னால் இருந்து செயல்படுகிறது. அதிமுக பிளவுக்கு மத்திய அரசு காரணம் அல்ல. பிளவுகளைக் கடந்து நிச்சயமாக அதிமுக ஒன்றிணையும். அதிமுக வெற்றி வாகை சூடும். அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம். பிரிந்து இருக்கிற அதிமுகவை ஒன்று சேர்த்து 2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம்" என்று பதிலளித்தார்.

இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான ஜெயக்குமார், ``சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் ஒன்று சேர வாய்ப்புள்ளது. சசிகலாவுடன் அதிமுக ஒன்று சேர வாய்ப்பில்லை. எத்தனை நரிகள் ஒன்று சேர்ந்தாலும் தந்திரத்தால் ஒன்றும் செய்ய முடியாது" என்று பதிலடி கொடுத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in