பழிக்குப் பழியாக நடந்த கொடூரத் தாக்குதல்... பெங்களுருவில் வெட்டப்பட்ட மு.க.அழகிரி ஆதரவாளர் மரணம்!

வி.கே.குருசாமி
வி.கே.குருசாமி

மதுரையின் திமுக பிரமுகரும், முன்னாள் அமைச்சருமான மு.க.அழகிரியின் ஆதரவாளரான வி.கே.குருசாமி பெங்களூருவில் ஒரு கும்பலால் கொடூரமான முறையில் வெட்டப்பட்டார்.இந்த நிலையில் அவர் மருத்துவமனையில் மரணமடைந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வி.கே.குருசாமி, ராஜபாண்டியன்.
வி.கே.குருசாமி, ராஜபாண்டியன்.

மதுரை காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் வி.கே.குருசாமி. இவர் திமுக கிழக்கு மண்டல தலைவராக இருந்தவர். முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இதே பகுதியைச் தொகுதியைச் சேர்ந்தவர் ராஜபாண்டியன். அதிமுகவைச் சேர்ந்த இவர் கிழக்கு மண்டல தலைவராக இருந்தார். வி.கே.குருசாமிக்கும், ராஜபாண்டிக்கும் 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசியல் ரீதியாக பகை இருந்து வந்தது.

இதன் காரணமாக இரண்டு தரப்பினரும் அடிக்கடி ஆயுதங்களுடன் மோதிக்கொண்டனர். இதில் வி.கே.குருசாமியின் மருமகன் வழக்கறிஞர் பாண்டியன், ராஜபாண்டியன் மகன் முனியசாமி என்ற தொப்பிலி உள்பட 20-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பழிக்குப் பழியாக நடந்த மோதலால் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்த போலீஸார், பலரை கைது செய்தனர்.

ஆனாலும், முன்விரோத மோதல்கள் குறைந்தபாடில்லை. ராஜபாண்டியின் உறவினரான காளிமுத்து என்ற வெள்ளை காளி தலைமையில் ஒரு கும்பல், வி.கே.குருசாமி, அவரது மகன் மணி ஆகியோரை கூலிப்படையை ஏவி கடந்த ஜனவரி மாதம் கொலை செய்ய முயன்றனர்.

தனது வீட்டின் அருகே ஆயுதங்களுடன் சிலர் பதுங்கியிருந்ததை அறிந்த வி.கே.குருசாமி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். கீரைத்துறை ஆய்வாளர் பெத்துராஜ் தலைமையில் வந்த போலீஸார், வி.கே.குருசாமி வீட்டின் அருகே பதுங்கியிருந்த திண்டுக்கல் மேட்டுபட்டி ஜேசுரூபன் (30), திருச்சி அரியமங்கலம் மணிகண்டன் (25), மதுரை காமராஜபுரம் மாதவன்(19), மதுரை தென்பழஞ்சி ராஜேஷ் (30), பழநி அடிவாரம் பூபாலன் (32), எல்லீஸ் நகர் பாண்டியராஜன் (23) ஆகியோரை கைது செய்தனர்.

இதையடுத்து வி.கே.குருசாமியும், அவரது மகன் மணிகண்டனும் மதுரையில் இருந்து தலைமறைவாகினர். வெளியூர்களில் இருந்து கொண்டு வழக்கறிஞர்கள் மூலம் வழக்குகளைச் சந்தித்து வந்தனர்.

ஓட்டலில் அமர்ந்திருந்த வி.கே.குருசாமி
ஓட்டலில் அமர்ந்திருந்த வி.கே.குருசாமி
வெட்டப்படும் வி.கே.குருசாமி
வெட்டப்படும் வி.கே.குருசாமி

இந்த நிலையில், செப். 5-ம் தேதி பெங்களூரூ சுக்சாகர் பகுதியிலுள்ள ஓட்டல் ஒன்றில் அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்த வி.கே.குருசாமியை 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியது. இதில் வி.கே.குருசாமி நிலைகுலைந்து விழுந்தார். இதனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

ஓட்டலில் வி.கே.குருசாமி மீது நடந்த தாக்குத்ல்
ஓட்டலில் வி.கே.குருசாமி மீது நடந்த தாக்குத்ல்

அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த வி.கே.குருசாமியை மீட்டு க்யூரா மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவம் நடந்த இடத்தை பெங்களூரு கிழக்கு மண்டல துணை ஆணையர் பீம்ம சங்கர் ஆய்வு செய்ததுடன் குற்றவாளிகள் குறித்து விசாரணை நடத்தி கைது செய்ய உத்தரவிட்டார். பானசுவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். வி.கே.குருசாமி வெட்டப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வி.கே.குருசாமி இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மதுரை காமராஜர் புரம், கீரைத்துறை ஆகிய பகுதிகளில் அசம்பாவிதம் நடக்காத வகையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in