`பொள்ளாச்சி வழக்கை போல் அல்ல, விருதுநகர் பாலியல் வழக்கில் விரைவில் நீதி'

சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
`பொள்ளாச்சி வழக்கை போல் அல்ல, விருதுநகர் பாலியல் வழக்கில் விரைவில் நீதி'

விருதுநகரில் பட்டியலின பெண் ஒருவரை திமுக இளைஞரணியைச் சேர்ந்த ஹரிஹரன் காதலிப்பதாக கூறி அந்தப் பெண்ணுடன் இருக்கும் காட்சியை வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருடன் சேர்ந்து விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜுனைத் மற்றும் இருவரும், 4 பள்ளி மாணவர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், விருதுநகர் போலீஸார் அவர்கள் 8 பேரையும் கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்ற போதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அவருக்காக குரல் கொடுக்காதது சர்ச்சையானது. அதே நேரத்தில் நாளை (24-ம்தேதி) அந்தப் பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தப் போவதாக விருதுநகர் கிழக்கு மாவட்ட பாஜக அறிவித்தது. இதைத் தொடர்ந்து 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜுனைத்தை திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்தார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

இந்தப் பிரச்சினையை இன்று சட்டப்பேரவையில் எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அப்போது பேசிய அவர், இந்த வழக்கை முறையாக விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்வதாக குற்றம்சாட்டிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறினார். இதைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

இந்தப் பிரச்சினைக்குப் பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசுகையில், விருதுநகரில் 22 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் வழக்குப்பதிவு செய்து, 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள நான்கு பேர் சிறார் நீதிமன்றத்தின் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை ஒரு மாடல் வழக்காக, நேரடியாகக் கண்காணிக்குமாறும், அதிகபட்சத் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றும் காவல் துறைத் தலைவர் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.

இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை பொள்ளாச்சி வழக்கு போல கையாள மாட்டோம். வண்ணாரப்பேட்டை 13 வயது சிறுமி பாலியல் வழக்கு போலில்லாமல் இது முறையாகக் கையாளப்படும். இந்த மாநிலத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே விரைந்து தண்டனை பெறுவதில் ஒரு முன்னோடி வழக்காக இது இருக்கும். விருதுநகர் பாலியல் குற்ற சம்பவத்தில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இது மாதிரி தவறு செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கப் போகிறது'' என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in