சென்னை வக்கீல் சங்கத்தேர்தலில் வன்முறை: வாக்குச்சாவடி சூறை

சென்னை வக்கீல் சங்கத்தேர்தலில் வன்முறை: வாக்குச்சாவடி சூறை

சென்னையில் வழக்கறிஞர் சங்க தேர்தலில் வாக்குப்பதிவு மையம், வாக்குப்பதிவு இயந்திரம் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும். கடந்த 2016 நவம்பர் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவராக ஜி.மோகனகிருஷ்ணன், துணைத்தலைவராக ஆர்.சுதா, செயலாளராக கிருஷ்ணகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதன்பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. 2016-ம் ஆண்டு வெற்றி பெற்றவர்களின் பதவிக்காலம் கடந்த 2018-ம் ஆண்டு நிறைவடைந்தது.

இந்த நிலையில் வழக்கறிஞர் சங்க தேர்தல் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், தேர்தல் தள்ளிபோனது. இதுதொடர்பான பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பிறகு, இன்று (ஜனவரி 9) தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தேர்தல் அலுவலராக மூத்த வழக்கறிஞர் கபீரை உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இந்த தேர்தலில் 4696 வழக்கறிஞர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த டிச.14-ம் தேதி வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் சங்க தலைவர் பதவிக்கு ஜி.மோகனகிருஷ்ணன், எம். வேல்முருகன், சத்தியபால் செயலாளர் பதவிக்கு கிருஷ்ணகுமார் உள்பட பலர் மனுத்தாக்கல் செய்தனர். அது தொடர்பான நடைமுறைகள் முடிந்து இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அப்போது சில வழக்கறிஞர்கள், வாக்குச்சீட்டுகளுக்கான கியூஆர் கோடு சீட்டுகளை வெளியே எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதையொட்டி சுமூகமான முறையில் நடந்து கொண்டிருந்த வந்த தேர்தல் வன்முறையாக மாறியது. இதனால் வாக்குச்சாவடியில் திடீர் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதையடுத்து சில வழக்கறிஞர்கள் வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரம் உள்பட அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதனால் தேர்தல் நடத்தும் அதிகாரியான மூத்த வழக்கறிஞர் கபீர், தேர்தலை தள்ளி வைப்பதாக அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இச்சம்பவம் குறித்து தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேர்தல் நாள் அறிவிக்கப்படும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in