`பெயர், புகழுக்கு அண்ணனே காரணம்'- ராகுல் காந்தியை சந்தித்த வில்லேஜ் குக்கிங் யூடியூப்பர்ஸ் உருக்கம்

`பெயர், புகழுக்கு அண்ணனே காரணம்'- ராகுல் காந்தியை சந்தித்த வில்லேஜ் குக்கிங் யூடியூப்பர்ஸ் உருக்கம்

கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் ராகுல் காந்தி. இந்தப் பயணம் காஷ்மீர் வரை செல்கிறது. மொத்தம் 150 நாள்கள், 3,500 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த நடைபயணம் குமரி மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. இந்தப் பயணத்தின் ஊடே ராகுல் காந்தியை பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் சந்தித்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்களும் ராகுல் காந்தியை இன்று சந்தித்து, அவரோடு சிறிதுதூரம் நடைபயணமும் செய்தனர்.

ராகுல் காந்தி முன்பு ஒருமுறை தமிழகம் வந்தபோது வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலோடு, அவர்களின் நிகழ்ச்சி ஒன்றிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்வதை அறிந்து வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியைப் பார்க்க வந்தனர். அப்போது அவர்களின் தோளில் கைபோட்டு ராகுல் சிறிது தூரம் பேசிக்கொண்டே நடந்தார்.

ராகுல் என்ன பேசினார் என்பது குறித்து செய்தியாளர்களிடம் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "ராகுல் எங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எங்களோடு சேர்ந்து சாப்பிட்டது வாழ்க்கையிலேயே மறக்க முடியாத நிகழ்வு. அதன் மூலம் எங்களுக்கு இந்திய அளவில் பெயர், புகழ் வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்த அண்ணனுக்கு நன்றி சொல்லும் விதமாகத்தான் கன்னியாகுமரிக்கு நேரில் வந்து சந்தித்தோம். எங்கள் குழுவின் மூத்தவரான தாத்தா, ராகுல் அண்ணனின் பயணத்திற்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

இதேபோல் நடந்து கொண்டிருக்கும்போதே ராகுல், இதேபோல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் குக்கிங் சேனல்கள் சேர்ந்து ஒரு சமையல் நிகழ்ச்சி செய்யலாமே? அப்போது பல்வேறு மாநிலங்களின் உணவுக்கலாச்சாரம் தெரியுமே? எனக் கேட்டார். விரைவில் அதைச் செய்வோம்” என்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in