அதிமுகவினர் தோளில் சுமக்கும் வேதாளம் பாஜக!

விளாசும் விஜயதரணி
விஜயதரணி
விஜயதரணி

ஒளிவு மறைவின்றி எப்போதும் மனதில் பட்டதை பளிச்சென பேசுபவர் விஜயதரணி. காங்கிரஸ் கட்சிக்காக தொலைக்காட்சி விவாதங்களில் ஆக்கபூர்வமான கருத்துகளை முன்வைக்கும் விஜயதரணி எம்எல்ஏ காமதேனு மின்னிழுக்கு அளித்த பேட்டி இது.

நாடு முழுவதும் பாஜக பலம்பெற்று வருவதை அவதானிக்கிறீர்களா..?

அது வெறும் தோற்றம் தான். அண்மையில் கேரளத்தின் திருக்காக்கரைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் எல்டிஎஃப்-ஐ வீழ்த்தி அங்கே காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதுமட்டுமில்லை... அந்தத் தொகுதியில் பாஜகவுக்கு டெப்பாசிட்டே கிடைக்கவில்லை. கேரளாவில் எந்தத் தொகுதியிலும் பாஜகவுக்கு டெப்பாசிட் கிடைக்காது. எல்டிஎஃப்-பின் ஓராண்டு ஆட்சியின் அதிருப்தியும், திருக்காக்கரைத் தொகுதியில் எதிரொலித்தாலும் காங்கிரஸ் கட்சியின் தேவையை கேரள மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். திருக்காக்கரைத் தொகுதி வெற்றியானது காங்கிரஸ் கட்சியின் தொடர் வெற்றிகளின் தொடக்கமாக இருக்கப்போகிறது. கேரள மக்கள் காங்கிரசின் தேவையை உணர்ந்திருப்பதைப்போல் நாடு முழுவதும் உள்ள மக்கள் உணரும் காலம் உருவாகியிருக்கிறது.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் உங்கள் கூட்டணி பார்ட்னரான திமுகவின் அணுகுமுறையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நீதிமன்றம் பேரறிவாளனை நிரபராதி எனச் சொல்லவில்லை. அவரது நீண்ட நெடிய சிறைவாசம் போதும் என்றுதான் விடுவித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது சரியாக இருக்காது. வழக்கறிஞர் என்ற முறையில் அதுகுறித்து நான், நன்றாகவே அறிந்திருக்கிறேன். எப்படி, நீதிமன்ற தீர்ப்பை விமர்சிப்பது பொருத்தமாக இருக்காதோ, அதேபோல் அதைக் கொண்டாட வேண்டிய அவசியமும் கிடையாது. பேரறிவாளன் தண்டனை பெற்ற குற்றவாளி மட்டும் அல்ல. தண்டனை நிறைவேற்றப்பட்ட குற்றவாளியும்கூட.

இதையெல்லாம்விட, இவ்விவகாரத்தில் பலரும் கவனிக்கத் தவறிய ஒரு விஷயம் இருக்கிறது. பொதுவாக ஒருநபர் குற்றம் செய்து விடுதலையாகும் போது சட்டத்திற்கு அப்பால் அவருக்குக் கிடைக்கும் தண்டனை ஒன்று இருக்கிறது. அதுதான் பொதுச்சமூகம் அவரைப் பார்க்கும் பார்வை. அதற்குப் பயந்தே பலரும் தவறுசெய்யப் பயப்படுவார்கள். அப்படியிருக்கையில் தண்டனைக்காலம் முடிந்து வெளியில் வரும் குற்றவாளியைக் கொண்டாடுவது தவறான முன்னுதாரணம். அது தவிர்க்கப்பட வேண்டியது. இப்படியே தொடர்ந்தால் நாளை பாலியல் குற்றவாளிகளும், கொலை, கொள்ளை, திருட்டுச் சம்பவங்களில் இருந்து வெளியே வருவோரும் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். காங்கிரசின் போராட்டத்தால் மிகு கொண்டாட்டங்கள் அணைபோடப்பட்டது. அரசின் தலைமை பீடத்தில் இருப்பவர்களின் ஆதரவோடு கொண்டாட்டங்கள் நடந்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் மீண்டும் ராஜ்ய சபாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். காங்கிரசில் தகுதியான வேறுயாருமே இல்லையா?

ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். காங்கிரசுக்கு தமிழகத்தில் கிடைத்ததே ஒரு நபருக்கான வாய்ப்புதான். அதுவும்கூட திமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவோடு, அவர்களின் வாக்குகளையும் பெற்றே வெற்றிபெற்றோம். ப.சிதம்பரத்தைப் பொறுத்தவரை, பாராளுமன்றத்தில் மோடி அரசின் தவறுகளை புள்ளிவிவரங்களுடன் விமர்சிப்பவர். எந்த நிலையிலும் தன் கருத்தை பின்வழித்துக் கொள்ளாதவர். எத்தகைய மிரட்டலுக்கும் துளியும் அச்சாதவர். ப.சிதம்பரம் பச்சைத் தமிழர். அந்த வகையில் தமிழகத்தில் இருந்து தகுதியான நபரை டெல்லிக்கு மீண்டும் அனுப்பியிருப்பதில் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் தலைமைத்துவத்தை நீங்கள் பாராட்டத்தான் வேண்டும். இப்போது பாஜகவுக்கு எதிராகக் களமாடும் அவசியமான நபராக ப.சிதம்பரம் இருக்கிறார். வருங்காலத்தில் ராஜ்யசபாவுக்கு கூடுதல் வாய்ப்புகள் வரும் போது தகுதியான மற்றவர்களுக்கும் வாய்ப்புக் கிடைக்கும்.

தமிழகத்தில் பாஜக நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதே?

அப்படியா? அது உண்மையென்றால் எத்தனை மாநகராட்சி, நகராட்சிகளை இப்போது கைவசம் வைத்திருக்கிறார்கள் சொல்லுங்களேன். நாகர்கோவிலிலேயே பாஜகவால் மேயர் இடத்தைப் பிடிக்க முடியவில்லை. பாஜகவின் வளர்ச்சி என்பதே தமிழகத்தில் சொல்லப்படும் வளமான கற்பனைச் சொல்லாடல்தான். பேச்சாற்றல் பிம்பத்தால் மக்கள் மத்தியில் பேசப்படுகிறார்கள். அவ்வளவுதான். அது ஓட்டாக மாற்றாது. அதைத்தான் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியதே!

பேச்சாற்றல் பிம்பத்தை வைத்துத்தானே காங்கிரஸையே திராவிட கட்சிகள் வீழ்த்தின?

அந்தப் பேச்சாற்றல் வேறு, இப்போது பாஜக பயன்படுத்தும் பேச்சாற்றல் வேறு. தேசியத்திற்கும் மாநிலத்திற்கும் இடையேயான பிம்பத்தை பேசி திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. டெல்லியில் ஆம் ஆத்மி ஜெயித்ததும், அம்மக்கள் அதை மாநிலக் கட்சியாக பார்த்ததால் தான். தேசிய அரசியலை நோக்கி மக்கள் மாறும்போதுதான் இந்தக் கேள்வி பிறக்கும். அதுவரை பாஜகவுக்கான இடமே தமிழகத்தில் இருக்காது. வேண்டுமென்றால் இப்போது போல கூட்டணி சேர்ந்து நான்கைந்து இடங்களைப் பிடித்து ஊடக பிம்பத்தால் அவர்களே அவர்களைப் பெரிதாகக் காட்டிக் கொள்ளலாம். அதைத்தான் பாஜக செய்கிறது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்

நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால், பாஜக தானே ஆக்கபூர்வமான எதிர்க்கட்சி போலச் செயல்படுகிறது. ஊழல் பட்டியலெல்லாம் வெளியிடுகிறதே?

அதிமுக தனது செயல்பாட்டை இன்னும் கூர்தீட்டிக் கொள்ள வேண்டியதைத்தான் இது காட்டுகிறது. விக்கிரமாதித்தன் தோளில் ஏறிக்கொண்ட வேதாளம் போல் இறக்கிவிட முடியாமல் பாஜகவைத் தோளில் போட்டுக்கொண்டு தவிக்கிறது அதிமுக. மோடியா... இந்த லேடியா? என்று துணிச்சலாகக் கேட்ட ஜெயலலிதா கட்சியின் இன்றைய நிலையை அதிமுகவினர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படியில்லாமல், இன்னமும் பாஜகவை தூக்கிச் சுமப்பார்கள் என்றால் அவர்களே அவர்கள் கண்ணில் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்ட கதையாகிவிடும்.

மக்களவைத் தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் என்ன வியூகம் வைத்திருக்கிறது. பிரசாந்த் கிஷோரும் பின்வாங்கிவிட்டாரே..?

இப்போது தேர்தல் வியூகர் சுனில் காங்கிரஸ் கட்சிக்காக தீவிரமாக செயல்பட்டுவருகிறார். பெரிதாகத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல், கூர்நோக்கு சிந்தனையுடன் சிறந்த நபராக அவர் செயல்படக்கூடியவர். மக்களவைத் தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் ஜெயித்த அதிமுகவை, 2021 சட்டமன்றத் தேர்தலில் 66 தொகுதிகளில் ஜெயிக்க வைத்ததில் சுனிலின் பங்களிப்பு மிக முக்கியமானது. சுனிலின் பிரச்சார வியூகங்கள் ஒருபுறமிருக்க, அணுகுவதற்கு எளிதாக இருக்கும் காங்கிரஸ் கட்சியுடன் மாநிலக் கட்சிகள் பலவும் கைகோக்கத் தயாராகி வருகின்றன. மக்கள் நிச்சயம் இம்முறை காங்கிரஸ் அணிக்கு வாய்ப்புத் தருவார்கள். அந்த அளவுக்கு பாஜக அரசால் மக்கள் அனைத்து விதத்திலும் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். அதெல்லாமே அவர்களை காங்கிரஸ் நோக்கி திரும்பவைத்துக் கொண்டிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in