நேற்று பாஜகவுக்கு குட்பை... இன்று காங்கிரஸில் ஐக்கியம்... நடிகை விஜயசாந்தியின் அரசியல் சதுரங்கம்

காங்கிரஸில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி
காங்கிரஸில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி

தெலங்கானா மாநில பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் இன்று காங்கிரஸில் இணைந்தார்.

தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தல் வருகிற 30ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி மற்றும் காங்கிரஸ் இடையே ஆட்சியைப் பிடிப்பதில் தீவிர போட்டி நிலவி வருகிறது. பாஜக ஒற்றை இலக்கங்களில் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், அக்கட்சியின் வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் விஜயசாந்தி
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார் விஜயசாந்தி

இந்நிலையில் தெலங்கானா மாநில பாஜகவில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த பிரபல நடிகை விஜயசாந்தி, சட்டப்பேரவை தேர்தலில் சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இதனால் அவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.

நேற்று அதிகாரபூர்வமாக பாஜகவில் இருந்து விலகுவதாக விஜயசாந்தி அறிவித்திருந்தார். விரைவில் அவர் காங்கிரஸில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி
நடிகையும் அரசியல்வாதியுமான விஜயசாந்தி

அவருக்கு பொன்னாடை அணிவித்து மல்லிகார்ஜுன கார்கே வரவேற்றார். அப்போது தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர். கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிஆர்எஸ் கட்சி குறித்து தொடர்ந்து விமர்சனங்களை விஜயசாந்தி முன்வைத்து வந்தார். மேலும் மாநிலத்தின் நலனுக்காக மக்கள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் ஏற்கெனவே அனைத்து தொகுதிகளுக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், இம்முறை தேர்தலில் போட்டியிட விஜயசாந்திக்கு சீட் கிடைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலில் அவருக்கு முக்கிய தொகுதியில் சீட் வழங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in