`ஓட்டை, உடைசல் பஸ் வேண்டாம்'– தமிழக அரசை வலியுறுத்தும் விஜயகாந்த்

`ஓட்டை, உடைசல் பஸ் வேண்டாம்'– தமிழக அரசை வலியுறுத்தும் விஜயகாந்த்

"தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 30 சதவீத பேருந்துகள் காலாவதியாகிவிட்டன. இதனால் தமிழக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். காலாவதியான அரசுப் பேருந்துகளைத் திரும்பப் பெற வேண்டும்" என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் காலாவதியாகிவிட்ட 30 சதவீத அரசுப் பேருந்துகளை திரும்பப் பெற வேண்டி ஏற்கெனவே தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தோம். அதையும் மீறி காலாவதியான பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால் தமிழக மக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். பெரும்பாலான அரசுப் பேருந்துகள் ஓட்டை, உடைசலான நிலையிலேயே இயக்கப்படுகிறது. பேருந்தின் மேற்கூரை முழுவதும் சேதமடைந்துள்ளதால் மழை பெய்யும் நாட்களில் பயணம் செய்யும் பயணிகள் மழையில் நனைந்தவாறே செல்லும் நிலை உள்ளது.

மேலும் மேற்கூரை எப்போது விழும் என்ற அச்சத்தில் பயணிகள் பயணம் செய்கின்றனர். அரசுப் பேருந்தின் ஜன்னல் கண்ணாடிகள் முழுவதும் மிகவும் பழுதடைந்து மூடியநிலையில் திறக்க முடியாமல் உள்ளது. இதனால் பகல் நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள் காற்றோட்டம் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அரசு பேருந்துகள் அடிக்கடி பழுதடைந்து விடுவதால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓட்டை, உடைசலான அரசு பேருந்துகள் இயக்கப்படுவது தமிழக மக்களை மிகவும் வேதனை அடைய செய்துள்ளது. குறிப்பாகப் புறநகர்ப் பகுதிகளில் காலாவதியான அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல இல்லாமல், அசம்பாவித சம்பவங்கள் நிகழ்வதற்கு முன்பே, தமிழகம் முழுவதும் இயக்கப்படும் காலாவதியான அரசுப் பேருந்துகளை மாற்றி, மக்கள் பாதுகாப்பாகப் பயணிக்க, புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம், ஐந்து வயது வரை உள்ள சிறுவர்களுக்கு அரசு பேருந்துகளில் இனி கட்டணம் வசூலிக்கப்படாது என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்கிறேன். அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆய்வு செய்ய வேண்டும். அதில் தரமில்லாத பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிலிருந்து திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

நஷ்டத்தில் இயங்கும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தை எப்படிச் சமாளிக்கப் போகிறதோ தமிழக அரசு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in