
தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குக் காலில் உள்ள விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளாகவே பாதிக்கப்பட்டிருக்கிறார். யாருடைய துணையுமின்றி அவரால் தனியாக நடக்க முடியாத நிலை இருக்கும் காரணத்தால் அவருக்கு வெளிநாடுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 14-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். “வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார்” என அக்கட்சியின் சார்பாகத் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 15-ம் தேதி அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் விஜயகாந்த்துக்கு நீரிழிவு பிரச்சினை காரணமாக வலது காலில் உள்ள விரல்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லை. இதனால் வலது காலில் உள்ள மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்தும் விதமாக அக்கட்சியின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து அவர் வீட்டிற்கு வர சில நாட்கள் ஆகும் என்பதால், அவர் குறித்து வெளியாகும் தவறான தகவல்களை ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றப்பட்ட செய்தி அறிந்து அவரின் ரசிகர்கள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர்.