விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சிக்கியது என்ன?- பட்டியலை வெளியிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை

விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சிக்கியது என்ன?- பட்டியலை வெளியிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது.

தேசிய மருத்துவக்குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு கடந்த ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் மீது புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று சோதனை நடத்தினர்.

இதேபோல், தெரு விளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டத்தில் அரசுக்கு 500 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று எஸ்.பி.வேலுமணியின் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனை மாலை வரை நீட்டித்தது.

இந்நிலையில், விஜயபாஸ்கர், வேலுமணி ஆகியோரின் வீட்டில் கைப்பற்றப்பட்டவை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான 31 இடங்களில் நடந்த சோதனையில் 32.95 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1,228 கிராம் தங்க நகைகள், 948 கிராம் வெள்ளி பொருட்கள், பத்து 4 சக்கர வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 316 ஆவணங்கள், 2 வங்கி பெட்டகச் சாவிகள் விசாரணைக்காக கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 13 இடங்களில் நடந்த சோதனைகளில் 18.37 லட்சம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1,772 கிராம் தங்க நகைகள், 8.28 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 120 ஆவணங்கள், 4 வங்கிப் பெட்டக சாவிகள். ஒரு வன்தட்டு, ஒரு பென்டிரைவ், 2 ஐ ஃபோன்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in