மக்களுக்காக களமிறங்கிவிட்டார் குமரி எம்பி: விஜய் வசந்த்தின் வேற லெவல் திட்டம்

மக்களுக்காக களமிறங்கிவிட்டார் குமரி எம்பி: விஜய் வசந்த்தின் வேற லெவல் திட்டம்
விஜய் வசந்த்

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி விஜய் வசந்த், ‘உங்கள் பகுதியில் உங்கள் எம்.பி’ என்னும் புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இதன்படி ஒவ்வொரு ஒன்றியத்திலும் அந்த, அந்த பகுதிக்கே சென்று மக்களைச் சந்தித்து குறைகேட்கும்வகையில் பிரத்யேக ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியையும் வலுப்படுத்த முடியும் எனவும் முனைப்புக் காட்டுகிறார்.

தமிழகத்திலேயே காங்கிரஸ் கட்சி வலுவாக இருக்கும் மாவட்டம் கன்னியாகுமரிதான். குளச்சல், கிள்ளியூர், விளவங்கோடு என இங்கு மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து வாகைசூடி வருகிறது. அதேபோல் கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியே வென்றது. இங்கு வென்ற வசந்தகுமாரின் மறைவுக்குப் பின்பு, நடந்த இடைத்தேர்தலில் அவரது மகன் விஜய் வசந்த் போட்டியிட்டு வென்றார்.

காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் இப்போது அதிரடியான செயல் ஒன்றைக் கையில் எடுத்துள்ளார். அதன்படி, ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய அளவிலும், சம்பந்தப்பட்ட ஒன்றியப் பகுதிகளுக்கே சென்று மக்களின் குறைகளைக் கேட்க உள்ளார். உங்கள் பகுதியில் உங்கள் எம்.பி எனும் இந்த முகாம் நாளை தொடங்குகிறது.

நாளை முதல்கட்டமாக அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு, அகஸ்தீஸ்வரத்தில் உள்ள வசந்தகுமாரின் மணிமண்டபத்தில் வைத்து அகஸ்தீஸ்வரம், தென் தாமரைக்குளம், கன்னியாகுமரி, கொட்டாரம் ஆகிய பேரூராட்சிகளுக்கும், கோவளம், குலசேகரபுரம், கரும்பாட்டூர், லீபுரம், மகாராஜபுரம், பஞ்சலிங்கபுரம், சாமிதோப்பு, வடக்குத்தாமரைக்குளம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களிடமும் குறைகேட்பு நிகழ்ச்சி நடக்கிறது. பொதுவாக எம்.பியை சந்திக்கவும், குறைகளைக் கேட்கவும் நாகர்கோவிலில் இருக்கும் எம்.பி அலுவலகத்திற்குத்தான் வரவேண்டும் என்னும் சூழல் இருந்தது. மேலும் அங்கு யாரை சந்திப்பது, எப்படி மனுகொடுப்பது என கிராமப்புறவாசிகள் குழம்பிப் போவதைத் தவிர்க்கவும், கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுசேர்க்கவுமே விஜய் வசந்த் இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

Related Stories

No stories found.