களத்தில் விஜய்... கலக்கத்தில் கட்சிகள்!



களத்தில் விஜய்... கலக்கத்தில்  கட்சிகள்!

ரஜினியைப் போல, “வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்” என்று சொல்லிவிட்டு வரவேண்டிய நேரத்தில் எஸ்கேப் ஆகாமல், வரவேண்டிய நேரத்துக்கு கரெக்டாக வந்திருக்கிறார் நடிகர் விஜய். அனைத்துக் கட்சித் தலைவர்களும் விஜயின் அரசியல் வருகையை சம்பிரதாயத்துக்கு வரவேற்றாலும் உள்ளுக்குள் அனைவருக்குமே ஓர் உதறல் இருக்கிறது. விஜயின் அரசியல் என்ட்ரியானது பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என்பதே கள நிலவரம்.

விஜய், புஸ்ஸி ஆனந்த்
விஜய், புஸ்ஸி ஆனந்த்

தனிப்பட்ட முறையில் தெளிவான அரசியல் நிலைப்பாடு இல்லையென்றாலும்கூட, பள்ளி குழந்தைகளுக்கு உதவி, அன்னதானம், பேரிடர் காலத்தில் உதவி என விஜய் மற்றும் அவரின் ரசிகர் மன்றத்தினர் அரசியலுக்கான களத்தை சில ஆண்டுகளாகவே தயார் செய்து வந்தனர். அரசியல் ஆசையை வெளிப்படுத்திய பின்னர் விஜயின் ஒவ்வொரு பட ரிலீஸும் சிக்கல்களை சந்தித்தது. ‘காவலன்’ பட ரிலீஸுக்கு திமுக அரசு இடையூறு செய்ததால், 2011-ல் ஜெயலலிதாவை ஆதரித்தார் விஜய். ‘அணிலாக இருந்து அதிமுக ஆட்சியமைக்க உதவினேன்’ என விஜய் கூறியதால் டென்ஷனான ஜெயலலிதாவும் பிற்பாடு விஜயின் படங்களுக்கு குடைச்சல் கொடுத்தார்.

விஜய்
விஜய்

அதன்பின்னர் திமுக, அதிமுக, பாஜக என ஏதேனும் ஒரு தரப்பை குறிவைக்கும் வகையில் தனது படங்களில் வசனங்கள் இருப்பது போல பார்த்துக்கொண்டார் விஜய். அத்துடன், படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் ஏதேனும் சர்ச்சை கருத்துக்களைப் பேசி அரசியல் அரங்கில் சலசப்பை ஏற்படுத்திய வண்ணம் இருந்தார். இந்தச் சூழலில் தான் அதிகாரபூர்வ அரசியலுக்கு வராமலேயே கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிட்டு பல இடங்களில் வென்றது. இதையெல்லாம் அடிப்படையாக வைத்து தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்து விட்டார் விஜய்.

விஜய் தனது அரசியல் பயணம் குறித்த அறிக்கையில், ‘ நிர்வாக சீர்கேடுகள், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரம், சாதி மதங்கள் மூலமான பிளவுவாத அரசியல் கலாசாரம்’ போன்றவற்றுக்கு எதிராக தனது கட்சி செயல்படும் என்று கூறியுள்ளார். மேலும், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வள்ளுவரின் சமத்துவ வரிகளை கட்சியின் ஸ்லோகனாகவும் வைத்திருக்கிறார்.

முக்கியமாக, ஜோசப் விஜய் என பாஜகவினரால் அடையாளப்படுத்தப்பட்ட விஜய், கட்சியின் லெட்டர் பேடில் நெற்றியில் குங்குமத்துடன் சிரிக்கிறார். இப்படி எல்லா தரப்பையும் பேலன்ஸ் செய்யும் விதமாக தனது முதல் அரசியல் அறிக்கையை விஜய் வெளியிட்டுள்ளார்.

ரசிகர் சந்திப்பில் விஜய்
ரசிகர் சந்திப்பில் விஜய்

நடிகர் விஜய், திமுக வசம் உள்ள சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களின் வாக்குகளை கவர பாஜகவால் அனுப்பப்பட்ட நபர் என்று ஒரு தரப்பு விமர்சிக்கிறது. பதிலுக்கு, அண்ணாமலையின் எழுச்சியை தடுக்க திமுகவால் வளர்த்தெடுக்கப்படும் நபரே விஜய் என பாஜக தரப்பு விமர்சனம் செய்கிறது. ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முடியாத விரக்தியில் இப்போது விஜயை பாஜக களமிறக்கியுள்ளது என அதிமுகவும் விமர்சனம் செய்கிறது.

புதிய தலைமுறை இளைஞர்களிடம் படு வேகமாக வளரும் சீமானின் செல்வாக்கை சரிக்கும் நோக்கத்துடனே விஜய் களமிறக்கப்பட்டுள்ளார் என நாம் தமிழர் கட்சியும் கொதிக்கிறது. இப்படி, கட்சி ஆரம்பித்ததுமே பலருடைய ‘பி டீம்’ என்ற முத்திரையை குத்திக் கொண்டிருக்கிறார் விஜய்.

மேலோட்டமாக தனது அரசியல் முழக்கங்களை முன்வைத்துள்ள விஜய், இன்னும் தனது தெளிவான கொள்கைப் பிரகடனத்தை வெளியிடவில்லை. இருப்பினும் விஜயின் அரசியல் திமுக, பாஜக, அதிமுக என மூன்று தரப்பையும் எதிர்க்கும் வகையிலேயே இருக்கும் என்கிறார்கள்.

விஜய்க்கு சிறுபான்மை சமூகத்தினர், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் மத்தியில் கணிசமான ஆதரவு உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த வாக்குகள் விஜய் ஈர்க்கும்போது அது நிச்சயமாக முக்கிய கட்சிகளை பாதிப்புக்கு உள்ளாக்கும். விஜயின் அரசியலால் திமுக வசம் இருக்கும் சிறுபான்மை வாக்குகள் சிதறலாம். அதேபோல, திமுகவுக்கு எதிரான மனநிலையில் அதிமுக, பாஜகவுக்கு செல்லும் வாக்குகளையும் விஜய் கவர்வார். தமிழ்த்தேசிய அரசியல் பேசும் சீமானுக்கும் விஜயின் அரசியல் பங்கம் விளைவிக்கலாம். எனவேதான் விஜயின் அரசியல் கட்சி அனைத்துத் தரப்பையும் உள்ளுக்குள் அலறவிட்டிருக்கிறது.

லயோலா மணி
லயோலா மணி

இது குறித்து பேசிய தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரபூர்வ மீடியா தொடர்பாளர்களில் ஒருவரான லயோலா மணி, “எங்கள் கட்சியானது அரசியல் கட்சிகள் மட்டுமின்றி பொதுத்தளத்திலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஊழல் ஒழிப்பு, நேர்மையான நிர்வாகம், சமத்துவ அரசியல் என்பதை அனைத்து அரசியல் கட்சிகளுமே சொன்னாலும், நாங்கள் அதனை உறுதியாக நடைமுறைக்கு கொண்டுவருவோம்.

கமல் இதுபோன்ற முழக்கங்களுடன் தான் அரசியலுக்கு வந்தார். ஆனால், இப்போது அவர் ஊழல் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்துள்ளார். ஆனால், நாங்கள் அதுபோல செய்யமாட்டோம். இதனால்தான், ‘அரசியல் என்பது தொழில் அல்ல, மக்கள் பணி’ என்று கூறியிருக்கிறார் விஜய்.

பிரிவினை, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகள் அற்ற அனைவரும் சமம் என்ற அரசியலை விஜய் முன்னெடுக்கிறார். பெரியார், காமராஜர், அம்பேத்கரின் அரசியலை முன்னிறுத்தி அரசியல் செய்யவுள்ளார். நாங்கள் மக்களுக்காக வேலை செய்யவே வந்துள்ளோம். நாங்கள் யாருடைய ‘பி டீமும்’ அல்ல. தமிழகத்தில் ஒன்றுமே இல்லாமல் இருந்த பாஜகவை இப்போது பெரிய அளவில் வளர்த்துள்ளது திமுகதான். திமுகதான் பாஜகவின் உண்மையான ‘பி டீம்’.

எந்த மாநில முதல்வரையும் சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதியை மட்டும் அடிக்கடி சந்திக்கிறார். திமுகவும், பாஜகவும் இப்போது மறைமுக கூட்டணியில் உள்ளது. அதிமுக இப்போது பல பிரிவுகளாக பிரிந்துள்ளது. இரட்டை இலை மீது ஏறி சவாரி செய்தே பாஜக 4 எம்எல்ஏ-க்களை பெற்றது. பாஜக தமிழகத்தில் வளர மிக முக்கிய காரணமே அதிமுதான். நாங்கள் பாஜக, திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு மாற்று சக்தியாகவே அரசியலுக்கு வந்துள்ளோம்.

‘முதல்வர்’ விஜய்
‘முதல்வர்’ விஜய்

எங்கள் இலக்கு 2026 சட்டமன்றத் தேர்தல்தான். வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்றாலும், நேர்மையான, சமூகத்துக்கு உழைக்கும் வேட்பாளர்களை அடையாளம் கண்டு வாக்களிப்போம்” என்றார்.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் எதிர்காலத்தில் உதயநிதியின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பார் என்ற பயம் திமுகவுக்கு இருக்கிறது. கடந்த ஆண்டு அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலின் சம்பந்தப்பட்ட ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றது. அதோடு வெளியான விஜயின் ‘வாரிசு’ படத்தை ரெட் ஜெயண்டுக்கு கொடுக்க விஜய் விரும்பவில்லை என்று செய்திகள் வெளியானது. 

என்றாலும், சில ஏரியாக்களை ரெட் ஜெயண்ட் கடைசி நேரத்தில் வாங்கியது. ஆனால், ‘வாரிசு’ படத்துக்கு சரியானபடிக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று அப்போது அதிருப்தி வெடித்தது. இதை விஜய் தரப்பு அவ்வளவாய் ரசிக்கவில்லை. அடுத்து ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கும் அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதுவும் விஜய் ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. 

இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் அண்மையில் திரையுலகினர் நடத்திய ’கலைஞர் 100’ விழாவில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தார் விஜய். இதையெல்லாம் பட்டியல் போடும் அரசியல் நோக்கர்கள், “விஜய் திமுகவுக்கு எதிராக களமாடவே வாய்ப்புகள்” அதிகம் என்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும் விஜயின் அதிரடி அரசியல் பிரவேசமானது தமிழக அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை நடிகர் விஜய் எந்தளவுக்கு காப்பாற்றுவார் என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in