‘என் மகனை பாஜகவில் சேரும்படி பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைத்தார்கள்’ - ஏ.கே.அந்தோணி மனைவி பகிரங்கம்!

அனில் - ஏ.கே.அந்தோணி - எலிசபெத்
அனில் - ஏ.கே.அந்தோணி - எலிசபெத்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணியை, பாஜகவில் சேருமாறு பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்து அழைத்ததாக ஏ.கே.அந்தோணியின் மனைவி எலிசபெத் அந்தோணி தெரிவித்திருக்கிறார். இத்துடன் மகன் அனில் அந்தோணி பாஜகவில் இணைந்ததை நியாயப்படுத்தியும் தாய் எலிசபெத் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ தியான மையத்தின் யூடியூப் சேனலில் உணர்ச்சிவசப்பட்டு உரையாற்றும் எலிசபெத், தந்தை - மகன் என ஒரே குடும்பத்தின் இருதுருவ அரசியல் குறித்தும் விளக்கமாகப் பேசியுள்ளார்.

அனில் அந்தோணி
அனில் அந்தோணி

முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் அந்தோணி, கடந்த ஏப்ரல் மாதம் பாஜகவில் இணைந்தார். கட்சியில் இருந்து விலகுவதற்கு முன்பு கேரள காங்கிரஸின் டிஜிட்டல் மீடியா பிரிவின் தலைவராக அனில் இருந்தார். திடீரென காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அனில் அந்தோணி, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் வி.முரளிதரன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

மகனின் இந்த செயல், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் நம்பிக்கையை பெற்ற தந்தை ஏ.கே.அந்தோணியை சங்கடத்தில் தள்ளியது. தனது மகனின் செயல் தவறானது என்றும், மிகவும் வேதனையளிக்கிறது என்றும் அப்போது தெரிவித்திருந்தார்.

இத்தனை நாள் இடைவெளிக்குப் பின்னர் இந்த விவகாரம், எலிசபெத் அந்தோணியின் யூடியூப் பேச்சால் மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது. மேலும் மகன் அனில் பாஜகவில் இணைந்ததை நியாயப்படுத்தும் அவரது பேச்சு, கேரளாவில் காங்கிரஸ் கட்சியை சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

தனது மகன்கள் இருவரும் அரசியலில் சேர விரும்பினாலும், வாரிசு அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய தீர்மானம் தடையாக அமைந்தது என்றும் ,அந்த பின்னடைவைப் போக்கவே அனில் அந்தோணி பாஜகவில் இணைந்ததாகவும் எலிசபெத் பேசியிருக்கிறார். மேலும், அனில் அந்தோணியை பிரதமர் மோடியின் அலுவலகத்தில் இருந்து அழைத்தவர்கள், பாஜகவில் சேருமாறு கூறியதாகவும் எலிசபெத் கூறியிருப்பது பாஜகவிலும் சர்ச்சையை கூட்டியுள்ளது.

எலிசபெத் அந்தோணியின் வீடியோ, இதர தளங்களில் பகிர தடை செய்யப்பட்டுள்ளது
எலிசபெத் அந்தோணியின் வீடியோ, இதர தளங்களில் பகிர தடை செய்யப்பட்டுள்ளது

காங்கிரஸ் - பாஜக என இருதரப்பு கட்சிகளையும் பதம் பார்க்கும் எலிசபெத் அந்தோணியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸில் இருக்கும் தந்தை ஏ.கே.அந்தோணி - பாஜகவில் இருக்கும் மகன் அனில் அந்தோணி ஆகிய இருவரும் எலிசபெத்தின் பேச்சு குறித்து இன்னமும் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in