தோழர் நல்லக்கண்ணு: அகவை 97 கொண்டாடும் மக்கள் போராளி!

தோழர் நல்லக்கண்ணு: அகவை 97 கொண்டாடும் மக்கள் போராளி!

இன்று(டிச.26) தனது 97வது பிறந்த நாளைக் கொண்டாடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, தனது 80 ஆண்டுகால பொதுவாழ்க்கையில், தமிழகத்தின் மக்கள் நலப் போராட்டங்களின் நடமாடும் ஆவணமாக கடந்து நிற்கிறார்.

ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த நல்லக்கண்ணு, உள்ளூர் பதுக்கல்காரர்களுக்கு எதிராக தனது பொதுவாழ்க்கையை தொடங்கியவர். மாணவப் பருவத்திலேயே தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக்கொண்டு போராட்டங்களில் களம் கண்டவர். உழைப்பு சுரண்டல்கள், சாதிக்கொடுமைகள், மணல்கொள்ளை ஆகியவற்றுக்கு எதிராக போராடி சிறைவாசம், காவல்துறையினரின் அடக்குமுறை மற்றும் சித்ரவதைகளுக்கு ஆளாகி இருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் என கட்சியின் முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார். கட்சி தந்த நிதியை திருப்பியளித்தது, அரசியல் ரீதியிலான சமரசங்களுக்கு ஆளாகாததில் அரசு தந்த வீட்டை காலி செய்தது என தனிப்பட்ட வாழ்க்கையிலும் இளம் தலைமுறையினருக்கு முன்னோடியாக வாழ்பவர். சமகாலத்தில் அவரோடு வாழ்ந்தோம் என்ற பெருமையை தந்திருப்பவர்.

நல்லக்கண்ணுவின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற அவரது பிறந்த நாளில் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று வாழ்த்தி மகிழ்ந்தார். அது தொடர்பான வாழ்த்து செய்தியில் ’பொதுவாழ்வில் தூய்மை, எளிமை ஆகியவற்றுக்கான குறிச்சொல்லாக மாறிவிட்ட மாபெரும் பொதுவுடைமைப் போராளி தோழர் நல்லக்கண்ணு அவர்களின் 97-வது பிறந்தநாளில் நேரில் வாழ்த்தி வணங்கினேன். இன்னும் பல்லாண்டுகள் தம் சிந்தனைக்கொடையால் நம் தமிழ்ச்சமூகத்தை அவர் செறிவூட்டட்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரும் நல்லக்கண்ணுவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

Related Stories

No stories found.