நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வெங்கடேசன் எம்பி!

நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய வெங்கடேசன் எம்பி!

நடிகர் வடிவேலுவை மதுரை எம்பி சு.வெங்கடேசன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக உள்ள வடிவேலுவின் குடும்பத்தினர் மதுரையில் வசித்து வருகின்றனர். வடிவேலுவின் தாய் சரோஜினி (87) வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கடந்த 19-ம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி மதுரை விரகனூரில் மரணம் அடைந்தார். இவரது மரணம் வடிவேலுவின் குடும்பத்தினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,"நடிகர் வடிவேலுவின் அன்புத்தாயார் சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். 'வைகைப் புயல்' வடிவேலுவிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நடிகர் வடிவேலுவை மதுரை எம்பி சு.வெங்கடேசன் எம்பி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "திரைக்கலைஞர் திரு வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி அம்மையாரின் மறைவையொட்டி இன்று அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in