`மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும்'- கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் வெங்கய்யா நாயுடு பேச்சு!

`மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும்'- கருணாநிதி சிலைத் திறப்பு விழாவில் வெங்கய்யா நாயுடு பேச்சு!

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு, “ஒவ்வொரு இந்திய மொழியும் உயர்வானதே என்றாலும், நாம் நம் தாய் மொழியை எப்போதும் முன்னிறுத்திச் செயல்பட வேண்டும். தமிழர்களாகிய நீங்கள் உங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பின்பற்றுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 1.07 கோடி மதிப்பீட்டில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையைக் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “நீங்க எங்களைப் போலவே வேட்டிக் கட்டுகிறீர்கள். அதனால் நீங்க எங்க ஊர்க்காரர். எங்கள் தலைவரைக் கைது செய்த போது நீங்கள் அறிவாலயத்திற்கு வந்தீர்கள். வாஜ்பாய்க்கு போன் செய்து துடியாய் துடித்து, நீங்கள் பட்ட பாட்டை நாங்கள் நேரில் பார்த்தோம். அந்த துடிப்புதான் உங்களை இன்றைக்குச் சிலை திறக்க வைத்துள்ளது. நீங்கள் சிலை திறப்பதிலே எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கருணாநிதியின் சிலையை யாரைக் கொண்டு திறக்கலாம் என்று நாங்கள் நினைத்த போது துணைக் குடியரசுத் தலைவர்தான் எங்கள் நெஞ்சினில் தோன்றினார். அவரை நேரில் சந்தித்து அனுமதி கேட்ட போது மனப்பூர்வமாகச் சம்மதித்தார். கருணாநிதி அவர்கள் சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் பணியாற்றியதற்கு எத்தகைய திறமை வேண்டும் என்பது குடியரசுத் துணைத்தலைவருக்குத் தெரியும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் கருணாநிதி உருவப்படத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்தார்கள். அவரின் சிலையை தற்போது நீங்கள் திறந்து வைத்துள்ளீர்கள். இதே அண்ணா சாலையில் பெரியாரின் விருப்பப்படி கருணாநிதிக்குச் சிலை வைக்கப்பட்டது. அது சிலரால் கடப்பாரைக் கொண்டு இடிக்கப்பட்டது. அப்போதும் அவருக்குக் கோபம் வரவில்லை; கவிதைதான் வந்தது. செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்தாலும், அந்த சின்ன தம்பி என் முதுகில் குத்தவில்லை நெஞ்சிலேதான் குத்துகிறான் எனக் கவிதை எழுதினார்” என்றார்.

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில், “இந்தியாவில் பெருமைமிகு முதல்வர்களில் கருணாநிதியும் ஒருவர். என் இளம் வயதில் அவருடைய பேச்சால் நான் ஈர்க்கப்பட்டிருக்கிறேன். பன்முகத் தன்மை, உழைப்பு என பல்வேறு ஆற்றல்களை தனக்குள் கொண்டவர். அவரின் சிலையைத் திறந்து வைப்பதில் பெருமை அடைகிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கருணாநிதி. நான் அரசியலில் ஓய்வு பெற்றாலும், பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை. சென்னை நகரம், என் நெஞ்சுக்கு நெருக்கமான நகரம். நீண்ட காலமாக கருணாநிதியுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். அவர் கைது செய்யப்பட்ட போது ஜனநாயக ரீதியான நான் வாதாடி இருக்கிறேன். நாம் எந்த கட்சியிலிருந்தாலும் மக்களுக்காக உழைக்கிறோம். அரசியலில் அனைவரையும் மதிக்க வேண்டும். எதிரியாகக் கருதக் கூடாது.

இந்தியா வலிமையான நாடாக விளங்குகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பல்வேறு கட்சிகள் ஆட்சி செய்கின்றன. மாநிலங்கள் வளர்ச்சி அடையும் போதுதான் நாடு வளர்ச்சி அடையும். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து பணியாற்ற வேண்டும். மொழி, இனம், கலாச்சாரம் எனப் பன்முகத்தன்மையோடு நாம் இருக்கிறோம். ஆனால் இந்தியராக ஒருமித்து இருக்கிறோம். ஒவ்வொரு இந்திய மொழியும் உயர்வானதே என்றாலும், நாம் நம் தாய் மொழியை எப்போதும் முன்னிறுத்திச் செயல்பட வேண்டும். தாய் மொழி கண் போன்றது. மற்ற மொழிகள் கண்ணாடி போன்றவை. ஒவ்வொருவரும் வீட்டில் தாய் மொழியைப் பேசுங்கள். நான் குடியரசுத் துணைத் தலைவராக ஆனபோது, என்னுடைய உடையைப் பற்றி செய்தியாளர்கள் என்னிடம் கேட்டார்கள். பதவிகளைப் போல என்னுடைய உடையை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்றேன். சர்வதேச கருத்தரங்கங்களுக்கும் கூட வேட்டி அணிந்துதான் செல்வேன். தமிழர்களாகிய நீங்கள் உங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் பின்பற்றுங்கள்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in