வெங்கையா நாயுடுவின் கவலை... ஆளும் பாஜகவுக்குப் புரிகிறதா?

வெங்கையா நாயுடுவின் கவலை... ஆளும் பாஜகவுக்குப் புரிகிறதா?

பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான தென்னிந்திய ஆளுமையும், நல்ல பேச்சாளருமான வெங்கையா நாயுடு, குடியரசுத் துணைத் தலைவராகி நான்கே முக்கால் ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் மத்திய அமைச்சரவையின் முக்கியப் பொறுப்பில் இடம்பெற்றிருந்தால், தென்னகத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்திருக்குமோ என்கிற எண்ணம் பலருக்கு உண்டு.

குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பில் இருந்தாலும்கூட, வெறும் ரப்பர் ஸ்டாம்பாக இல்லாமல் வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் நல்ல பல கருத்துக்களை வெளிப்படுத்துவது அவரது இயல்பு. கடந்த 10-ம் தேதி மிஸோரம் மாநிலம் சென்ற அவர், அம்மாநில சட்டப்பேரவையில் ஆற்றிய உரையில், முக்கியமான விஷயம் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். ``நாடாளுமன்றத்திலும், பல்வேறு மாநில சட்டப்பேரவைகளிலும் பெண்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை. குறிப்பாக மிஸோரம், நாகலாந்து சட்டப்பேரவைகளில் ஒரு பெண் கூட உறுப்பினராக இல்லை. மணிப்பூரில் 2, நாகலாந்தில் 5 பெண்கள் மட்டுமே சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். சட்டம் இயற்றுவதில் பெண்களின் பங்கு கூடுதலாக இருக்க வேண்டும்'' என்று பேசியிருக்கிறார்.

மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு

சட்டம் இயற்றுவதில் பெண்களின் பங்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்கிற இதே கருத்தை முன்வைத்து, 1996-ம் ஆண்டிலேயே 33% மகளிர் இடஒதுக்கீடு மசோதா இந்தியப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்றாலும் கூட அது இன்னமும் சட்டமாகவில்லை என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட வேண்டியதிருக்கிறது. உள்ளாட்சி மன்றங்களில் (மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மன்றங்கள்) மகளிர் இடஒதுக்கீடு 50% ஏற்கெனவே சாத்தியமாகிவிட்ட நிலையில், நாடாளுமன்ற, சட்டப்பேரவையிலும் மகளிர் பங்கை குறைந்தது 33%ஆக உறுதி செய்வதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.

1996லேயே அறிமுகமான இந்த மசோதா, 14 ஆண்டுகளுக்குப் பிறகு 8.3.2010 அன்று அதாவது 100-வது மகளிர் தினத்தன்று மாநிலங்களவையில் நிறைவேறியது. ஆனால், மக்களவையில் மசோதா நிறைவேறவில்லை. அரசமைப்புச் சட்டத்தையே திருத்துகிற மசோதா என்பதால், இரு அவைகளிலும் மூன்றில் இருபங்கு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு இது சட்டமாக்கப்பட வேண்டும். ஆனால், அப்போது மக்களவையின் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 262 எம்பிக்களே இருந்தார்கள்.

இத்தனைக்கும் மக்களவையில் கணிசமான உறுப்பினர்களைக்கொண்ட எந்த பிரதான கட்சியும், அப்போது பெண்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை. இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்த சமாஜ்வாதி கட்சியும், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியும் கூட என்ன சொன்னது என்றால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மகளிருக்கும், சிறுபான்மையின மகளிருக்கும் உள் ஒதுக்கீடு வேண்டும். இல்லை என்றால், மகளிர் ஒதுக்கீடு என்ற பெயரில் உயர் சாதிப் பெண்களே அந்த இடத்திலும் அமர்ந்துகொள்வார்கள் என்ற நியாயமான கவலையையே வெளிப்படுத்தின. மத்தியிலும், மாநிலத்திலும் இதுவரை கோலோச்சியுள்ள இந்திரா காந்தி, சோனியா காந்தி, சுஷ்மா சுவராஜ், பிருந்தா காரத், மம்தா பானர்ஜி, ஜெயலலிதா போன்ற பெண்கள் எல்லாம் உயர்ந்த சாதியினரே என்பதைக் கருத்தில்கொண்டால், இந்த வாதத்தின் பின்னிருக்கும் கவலை புரியக்கூடும்.

திமுகவின் நிலைப்பாடு

சமூகநீதியை தனது கொள்கையாகக் கொண்ட திமுக சார்பில், அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி என்ன சொன்னார் என்றால், 'மசோதா தற்போது நிறைவேறட்டும், மாற்றங்களை பிறகு செய்துகொள்ளலாம்' என்று. அவரது அந்த நிலைப்பாட்டை இன்றைய திமுக அப்படியே ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகமே. ஏனென்றால், அன்றைக்கிருந்த திமுக காங்கிரசுக்கு கட்டுப்பட்ட திமுக. இன்றைய திமுக காங்கிரஸையே வழிநடத்திச் செல்லும் திராணி பெற்ற திமுக. மகளிர் ஒதுக்கீடு கொடுக்கப்பட்ட பிறகு, உள்ஒதுக்கீட்டிற்கு மேலும் 20, 30 ஆண்டுகள் ஆனாலும்கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதை இன்றைய திமுக அறியும்.

எப்படியோ, அன்றைய ஐமு கூட்டணி அரசைவிட இன்றைய பாஜக அரசு கூடுதல் பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்துகிறது. அது நினைத்தால், இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும். மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கியது நாங்கள்தான் என்று மார்தட்டுகிற பாஜக அரசு, மகளிர் மசோதாவிலும் அந்த மாற்றத்தைச் செய்து அமல்படுத்தினால் திமுக என்ன, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எல்லாம் ஆதரித்துத்தான் ஆக வேண்டும்.

இந்திய வரலாற்றிலேயே அதிக பெண் (78) எம்பிக்களைக் கொண்ட மக்களவை என்ற பெருமை இன்றைய 17-வது நாடாளுமன்றத்துக்கு உண்டு. இப்போது இல்லாவிட்டால் எப்போது இந்தக் கனவு நிறைவேறும்? துணை ஜனாதிபதி வெங்கையாவின் கவலையைப் புரிந்துகொண்டு, இந்தியப் பெண்களின் ஆசையை நிறைவேற்றுமா பாஜக அரசு?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in