வேங்கைவயல் விவகாரம் தேசத்திற்கு அவமானம்:  திருமாவளவன் ஆவேசம்

வேங்கைவயல் விவகாரம் தேசத்திற்கு அவமானம்: திருமாவளவன் ஆவேசம்

வேங்கைவயல் விவகாரம் தேசத்திற்கே அவமானமான செயல். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்குப் பதிலாக சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுவதை வரவேற்கிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.

புதுக்கோட்டைமாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலைத் தொட்டி குடிநீரில் மனித மலம் கொட்டியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்பாட்டம் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறுகையில், " வேங்கைவயல் விவகாரம் தேசத்திற்கே அவமானமான செயல். சிறப்பு புலனாய்வு குழுவிற்குப் பதிலாக இந்த வழக்கை சிபிசிஐடி மாற்றப்பட்டு விசாரணை நடைபெறுவதை வரவேற்கிறோம். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

கழிவு கலக்கப்பட்ட தொட்டியயை இடிக்க வேண்டும். அந்த மக்களுக்கென தனித்தொட்டி அமைக்கக்கூடாது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்துள்ளனர். இதை அறியாமல் ஒருவார காலம் மக்கள் அந்த தண்ணீரை குடித்து நோய்வாய்பட்டுள்ளனர்.

இரட்டை குவளை போல், இரட்டைத் தண்ணீர் தொட்டி, இரட்டை சுடுகாடு போன்றவை கூடாது. இரட்டை குவளை முறை தமிழ்நாடு முழுவதிலும் உள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் தீண்டாமை உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் 10 இடங்களில் உள்ளது.

தமிழ்நாடு முழுவதிலும் உள்ள இரட்டை குவளை முறையை ஒழிக்க வேண்டும். மத்திய, மாநில பட்டியலின ஆணையம் உள்ளது. இவை இதுவரை புதுகோட்டை பகுதிக்குச் செல்லவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

மேலும், " முதல்வரோ, காவல்துறையோ சொன்னால் தான் அந்த பகுதிக்குப் போக வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. களத்தில் மக்களுக்கு உடனடியாக பணியாற்றி இருக்க வேண்டும். யார் பாதிக்கப்பட்டார்கள் என்பது பிரச்சினை அல்ல, மனித குலத்திற்கே அவமானமான பிரச்சினை. இதில் மற்ற அரசியல் கட்சிகள் கண்டனத்தை வெளிப்படுத்தாது வருத்தத்தை அளிக்கிறது" என்று திருமாவளவன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in