முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கோவையில் வேலுமணி நடத்தியது நாடகம்!- முதல்வர் ஸ்டாலின் சாடல்

"கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் என்று சொன்னால் தோல்வி பயம் அவர்களை சூழ்ந்துவிட்ட காரணத்தினால் பொய்யான காரணங்களை எடுத்துச் சொல்வதற்காக அவர்கள் நடத்திய நாடகம்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், ஆழ்வார்பேட்டை எஸ்ஐஇடி (SIET) கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, எழுப்பப்பட்ட கேள்விகளும், அதற்கு முதல்வர் அளித்த பதில்களும் வருமாறு:

இந்த தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

சென்னை மாநகராட்சியின் 122வது வார்டில் என்னுடைய வாக்கை ஜனநாயக முறைப்படி வாக்களித்துவிட்டு வந்திருக்கிறேன். அதேபோல் இன்றைக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உள்ளாட்சி அமைப்பு என்பது மகாத்மா காந்தி அவர்களே அடிக்கடி சொல்லி இருக்கிறார்கள், ‘இது ஒரு சிறு குடியரசு’. அரசு தீட்டக்கூடிய திட்டங்கள், அரசு நிறைவேற்ற வேண்டிய பணிகள் ஆகியவற்றை இந்த உள்ளாட்சி அமைப்புகளின் மூலமாகத்தான் ஆற்றிட முடியும். அதை உணர்ந்து இந்த உள்ளாட்சி அமைப்புகளில் வாக்களிக்கக் கூடிய உரிமை பெற்று இருக்கக்கூடியவர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை நான் கேட்டுக்கொள்கிறேன்.

கோவையில் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிறப்பு பார்வையாளர்களை நியமிக்கக் கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது இது குறித்து உங்களது பார்வை?

கோவையில் எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை. அந்தப் பகுதியைச் சார்ந்த ஒரு அமைச்சர் செய்திருக்கும் அடாவடித்தனங்கள், அயோக்கியத்தனங்கள் ஏற்கெனவே அதிமுக ஆட்சி நடைபெற்ற போதுதான் நடைபெற்றது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அவைகள் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் ஏற்கெனவே உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி தலைமையில், எதிர்க்கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு முன்பு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு காரணம் என்ன சொல்கிறார்கள் என்றால், துணை ராணுவம் வரவேண்டும், அதுவரையில் நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்துவோம் என்று அடம் பிடித்து இருக்கிறார்கள்.

மனைவியுடன் வாக்களித்த முதல்வர்
மனைவியுடன் வாக்களித்த முதல்வர்

துணை ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்தச் சம்பவமும் அங்கு நடைபெறவில்லை. எதற்காக அந்த போராட்டத்தை நடத்தி இருக்கிறார்கள் என்று சொன்னால் தோல்வி பயம் அவர்களை சூழ்ந்துவிட்ட காரணத்தினால், அதை மூடி மறைப்பதற்கு, ஏன் தோல்வி அடைந்தோம் என்று பொய்யான காரணங்களை எடுத்துச் சொல்வதற்காக அவர்கள் நடத்திய நாடகம் அவ்வளவுதான்!

ஒரு சில இடங்களில் பணப்பட்டுவாடாவில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது, பல இடங்களில் இதுபோன்ற புகார்கள் எழுந்திருக்கின்றது.

ஆதாரங்களை எல்லாம் நாங்கள் கொடுத்து இருக்கிறோம். அதிமுகவை போல எந்தவித ஆதாரமும் இல்லாமல் நாங்கள் எதுவும் சொல்லவில்லை. அதற்கான வீடியோ பதிவு, பத்திரிகைகளில் வந்திருக்கக்கூடிய செய்தி இவைகளை எல்லாம் அடிப்படையாக வைத்து, முறைப்படி எங்களுடைய வழக்கறிஞர் குழு அணுகி தேர்தல் கமிஷன் இடத்தில் தெளிவாக புகார் கொடுத்திருக்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.

கடந்த ஒன்பது மாத ஆட்சிக்கான ஒரு சான்று போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றி அமையும் என்கிறீர்களா?

நிச்சயமாக! உறுதியாக! அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சட்டமன்றத் தேர்தலில் எந்த அளவுக்கு ஆர்வமாக இந்த மக்கள் எங்களுக்கு ஆதரவு தந்தார்களோ, அதை விட அதிகமான அளவுக்கு வாக்குகளை ஆர்வத்துடன் வந்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி வந்திருக்கிறது. தேர்தல் முடிவு வந்த பிறகு அது புலப்படும்.

வாக்களிக்க வரிசையில் நின்ற முதல்வர் ஸ்டாலின்
வாக்களிக்க வரிசையில் நின்ற முதல்வர் ஸ்டாலின்

தொடர்ந்து ஆளும்கட்சி ஒன்றும் செய்யவில்லை என்று புகார் கூறுகிறார்களே?

நாங்கள் ஏதாவது தவறு செய்தால் அதை ஆதாரப்பூர்வமாக சொன்னால் எந்த விதமான நடவடிக்கைகள் எடுப்பதற்கும் எந்தவித ஆட்சேபனையும் இல்லை.

நகைக் கடன் தள்ளுபடியில்...

நகைக் கடன் தள்ளுபடி பொறுத்தவரை பல்வேறு அயோக்கியத்தனங்களை கடந்த கால ஆட்சியில் செய்திருக்கிறார்கள். நகையே இல்லாமல் போலி நகையை வைத்து அதில் கடன் வாங்கியிருக்கிறார்கள். விதிமுறை இருந்தாலும்கூட அந்த விதிமுறையை மீறி வாங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் நகையும் கிடையாது, ஒன்றும் கிடையாது வெறும் பொட்டலம் காண்பித்து கூட்டுறவு வங்கியில் கடனை வாங்கி இருக்கிறார்கள். அதையெல்லாம் நாங்கள் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தி, முறையாக இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அதுதான் உண்மை.

இந்தத் தேர்தலில் எந்த அளவுக்கு உங்கள் வெற்றி இருக்கும்?

சட்டமன்றத் தேர்தலை காட்டிலும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த ஒன்பது மாத கால ஆட்சியில் செய்திருக்கக்கூடிய சாதனைகளை அடிப்படையாக வைத்து ஓட்டு போட்ட மக்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு போட தவறிய மக்களும் அதை சிந்தித்துப் பார்க்கக் கூடிய அளவிற்கு, தவறு செய்து விட்டோமே என்று எண்ணக்கூடிய அளவிற்கு, பெரிய வெற்றியும், பெரிய ஆதரவும் எங்களுக்கு நிச்சயமாக இருக்கும்.

மாநகராட்சியை பொறுத்த அளவில் எவ்வளவு இடம் திமுக கைப்பற்றும்?

எங்களுக்கு வரும் செய்திகளை பொறுத்தவரை 21 மாநகராட்சிகளிலும் எங்களுடைய அணிதான் வெற்றி பெறும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in