விஜிலென்ஸ் கண்களால் துரத்தப்படும் வேலுமணி!

திமுகவின் திட்டம் தான் என்ன?
விஜிலென்ஸ் கண்களால் துரத்தப்படும் வேலுமணி!

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக முன்னணி நிர்வாகிகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன் வரிசைக்கு வந்தவர்களில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் சுகுணாபுரம் பழனிசாமி வேலுமணி (எஸ்.பி.வேலுமணி). செந்தில் பாலாஜியை விட பலமடங்கு அரசியல் வித்தைகள் கற்றவர் என்பதால் இவரை விஜிலென்ஸ் கண்களால் துரத்திக் கொண்டே இருக்கிறது திமுக அரசு.

இன்றைக்கு கோடிகளுக்கு சொந்தக்காரராக சொகுசு வாழ்க்கை வாழும் வேலுமணி ஆரம்பத்தில் சாதாரண காண்ட்ராக்டராக இருந்தவர் தான். கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரம் தான் வேலுமணியின் சொந்த ஊர். இவரது தந்தை பழனிசாமி மில் தொழிலாளியாக இருந்தவர். குடும்பத்தை இழுக்க அந்த வருமானம் போதுமானதாக இல்லாததால் வேலுமணியின் தாயார் மயிலாத்தாள் சத்துணவு அமைப்பாளர் வேலைக்குப் போகவேண்டிய சூழல் அன்றைக்கு.

காண்ட்ராக்டராக இருந்து கொண்டே அரசியலுக்குள் அடிவைத்த வேலுமணி, தொடக்கத்தில் குனியமுத்தூர் நகர்மன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் வேலுமணிக்குள் இருந்தது. அந்தக் கனவுகளைச் சுமந்து கொண்டு சென்னைக்கு ரயிலேறியவர், சினிமா வாய்ப்புகள் கைகொடுக்காததால் மீண்டும் குனியமுத்தூருக்கே திரும்பினார். அதன் பிறகு தீவிர அரசியலில் இறங்கிய வேலுமணியை 2001-ல் குனியமுத்தூர் நகர்மன்ற தலைவராக்கி அழகுபார்த்தார் ஜெயலலிதா. அடுத்ததாக 2006-ல் வந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பேரூர் தொகுதிக்கு கட்சியில் விருப்ப மனு கொடுத்தார் வேலுமணி. ஆனால், இவருக்கு சீட் மறுக்கப்பட்டு கே.பி.ராஜு என்பவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை , ராஜுவின் பெயர் மாற்றப்பட்டு வேலுமணியே வேட்பாளரானார்.

ரெய்டு நடந்த போது...
ரெய்டு நடந்த போது...

அந்தத் தேர்தலில் கடுமையாக களப்பணி செய்து எம்எல்ஏ ஆனாலும் அப்போது அவ்வளவு பிரபலமடையவில்லை வேலுமணி. அடுத்த தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு வந்த பிறகுதான் அவரது அரசியல் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. அப்போது கோவையில் கோலோச்சி வந்த சசிகலாவின் உறவினர் ராவணன் மூலமாகத்தான் வேலுமணி தன்னை படிப்படியாக வளர்த்துக் கொண்டதாக ஒரு பேச்சு உண்டு. சசிகலா குடும்பத்தினருடன் அத்தகைய நெருக்கம் இருந்ததால் தான் 2011-ல், சிறப்புத் திட்டங்கள் அமலாக்கம், வருவாய் மற்றும் சட்டத்துறை அமைச்சர் பதவியில் அமர்ந்தார் வேலுமணி.

அமைச்சர் பதவியில் அமர்ந்ததும் வேலுமணி அதிகார தர்பார் நடத்திய சமாச்சாரங்கள் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போனது. அதில் உண்மை இருந்ததாலோ என்னவோ எந்த விசாரணையும் இல்லாமல் வேலுமணியை அமைச்சர் பதவியிலிருந்தும், மாவட்ட செயலாளர் பதவியிலிருந்தும் அதிரடியாய் நீக்கினார் ஜெயலலிதா. இருந்த போதும் ‘ராவண ரகசியம்’ படித்து 2014-ல் மீண்டும் அமைச்சரவைக்குள் வந்தார் வேலுமணி. இம்முறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறைகளும் வேலுமணி வசமானது. இம்முறை எங்கே எப்படி இருக்க வேண்டும்... யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்ற அரசியல் சூட்சுமம் எல்லாம் தெரிந்து கொண்டதால் அடக்கமாக இருக்கக் கற்றுக் கொண்டார். அந்த அடக்கமே தொண்டாமுத்தூர் தொகுதியில் 2016-லும் போட்டியிடும் வாய்ப்பை அவருக்கு பெற்றுத் தந்தது.

இம்முறையும் பசையுள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறைகளுக்கே வேலுமணியை அமைச்சராக்கினார் ஜெயலலிதா. இந்த நிலையில், ஜெயலலிதாவின் திடீர் இறப்பை அடுத்து டி.டி.வி. தினகரனுக்கும், வேலுமணிக்கும் இடையே புகைச்சல் மூண்டது. இது தொடர்ந்தால் சசிகலா குடும்பம் தன்னை ஓரங்கட்டிவிடும் என ஊகித்த வேலுமணி, சாதிய பாசத்துடன் ஈபிஎஸ் பக்கம் சாய்ந்து கொண்டார். அவரும் ஓபிஎஸ் தரப்பை சமாளிக்க வேலுமணியை தனது தளக்கர்த்தராக வைத்துக் கொண்டார். இதனால் கடந்த ஆட்சியில் சூப்பர் சிஎம் கணக்காய் வலம் வந்தார் வேலுமணி. தனக்கான டெல்லி நகர்வுகளை ‘பெல் பிரதர்ஸ்’ என்று வர்ணிக்கப்பட்ட வேலுமணியையும், தங்கமணியையும் வைத்தே கச்சிதமாய் முடித்தார் ஈபிஎஸ். அவர் போகமுடியாத நேரங்களில் எல்லாம் மணிகள் இருவரும் அவருக்காக டெல்லிக்குப் பறந்தார்கள்.

2021 சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தொண்டாமுத்தூரை வென்ற வேலுமணி, கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணி கணிசமான வெற்றிகளைக் குவிக்க காரணமாய் இருந்தார். இதனையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் தேர்வு தொடர்பாக கட்சிக்குள் பிரச்சினை வெடித்தபோது, தன்னையும் அந்த இடத்துக்கு முன்னிறுத்த வேலுமணியும் சில வேலைகளைச் செய்தார். அதைத் தெரிந்து கொண்டுதான் அவரை அதிமுக சட்டமன்றக் கொறடாவாக முதல் ஆளாக முன்மொழிந்தார் ஈபிஎஸ்.

இப்படியெல்லாம் அரசியல் படித்து முன்னுக்கு வந்திருக்கும் வேலுமணி அமைச்சராக இருக்கும் போதே அவர் மீது திமுகவுக்கு காட்டம் உண்டு. காரணம், அந்த சமயத்தில் எங்கே போய் யாரைக் கேட்டாலும் வேலுமணி பெயரை உச்சரித்ததுதான். இதை அவ்வளவாக ரசிக்காத திமுக தலைமை, அப்போதே வேலுமணிக்கு ஸ்கெட்ச் போட்டுவிட்டது. அது சில நேரங்களில் ஸ்டாலினின் வாய் வார்த்தைகளாகவும் வெடித்துச் சிதறியது. அதன் அடுத்த கட்டமாகத்தான் இப்போது அவரது வீட்டுக்கு அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினரை அனுப்பி ரெய்டு நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தாங்கள் அதிகாரத்தில் இருக்கும் போதே வேலுமணியின் செல்வாக்கை சரித்துவிட வேண்டும் என துடியாய் துடிப்பவர்களில் முக்கியமானவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. வேலுமணியை இப்படியே விட்டுவைத்தால் நாளைக்கே அதிமுக ஆட்சிக்கு வந்தால் நமக்கு எதிராக அதிரடி கிளப்புவார் என்பது செந்தில் பாலாஜியின் சொந்தக் கவலை. அதனால் வேலுமணியின் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க வைக்க அவர் ரொம்பவே மெனக்கிடுவதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், “உள்ளூர் திமுகவினரால் ஏதும் பண்ணமுடியவில்லை என்பதால் தான் கரூரிலிருந்து செந்தில் பாலாஜியை கோவைக்கு இறக்குமதி செய்திருக்கிறது திமுக. அவரும் தலைமையை நம்பவைக்க சில செட் - அப் நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கிறார். அவரது ஆலோசனைப்படிதான் போஸ்ட் மேன் கணக்காய் அடிக்கடி அண்ணன் (வேலுமணி) வீட்டுக் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது லஞ்ச ஒழிப்புத் துறை. எத்தனை முறை தட்டினாலும் இவர்கள் நினைக்கும் எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதுபோல இன்னும் எத்தனை அடக்குமுறைகளை ஏவினாலும் அண்ணன் பீனிக்ஸ் பறவை போல எழுந்து வருவார். அப்படி வரும்போது செந்தில் பாலாஜிக்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்” என்கிறது வேலுமணி விசுவாச வட்டம்.

பார்க்கலாம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in