`வட மாநிலத்தவர் குடியேற்றத்தை வரம்புகட்டி தடுக்க வேண்டும்'- தமிழக அரசை வலியுறுத்தும் வேல்முருகன்

`வட மாநிலத்தவர் குடியேற்றத்தை வரம்புகட்டி தடுக்க வேண்டும்'- தமிழக அரசை வலியுறுத்தும் வேல்முருகன்

`தமிழ்நாட்டில் குடியேறி வரும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவர் குடியேற்றத்தால் தமிழகத்தில் தொடர் குற்றங்கள் அரங்கேறுவதால்  இனியாவது அதை  வரம்புகட்டித் தடுக்க வேண்டும்' என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து  இன்று அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில், `கடந்த 06.04.2022 அன்று ஈரோடு மாவட்டத்தில் தொழிற்சாலை ஒன்றில், பேச்சுவார்த்தைக்கு சென்ற காவல்துறையினரை வடமாநிலத்தினர் விரட்டி விரட்டி தாக்கினர். இதற்கு முன்பு, கடந்த 20.02.2022-ல் பெரம்பலூரில் பயணச்சீட்டு எடுக்கச் சொன்ன அரசுப் பேருந்து நடத்துனரை வடமாநிலத்தினர் பேருந்திலிருந்து தள்ளிவிட்டு தாக்கினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்சியில் பொறியியல் படித்த இளைஞர், வடமாநிலத்தவர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். திருப்பூர், அவிநாசி, கோவை, அம்பத்தூர், கிண்டி, திருப்பெரும்புதூர் போன்ற பல இடங்களில் தமிழ்த் தொழிலாளிகளை வடமாநிலத் தொழிலாளிகள் தாக்குவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.

தற்போது, சென்னை சைதாப்பேட்டை பகுதியில் சின்னமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜாயின்ஷா என்பவரை  வடமாநிலத்தவர்கள் தாக்கியதாகவும், அதில் ஜாயின்ஷா உயிரிழந்ததாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வட மாநிலத்தவர்கள் இங்கு கொள்ளை - கொலை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டுவிட்டு, எளிதாகத் தப்பிச் சென்று தங்கள் சொந்த மாநிலத்தில் பதுங்கிக் கொள்வதும் அவ்வப்போது நடக்கிறது. தமிழ்நாட்டின் தொழில் வணிகத்தை மார்வாடி, குசராத்தி,  தெலுங்கர், மலையாளிகள் எனப் பலதரப்பினரும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.

தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள், தொழிலகங்கள், தொடர்வண்டி நிலையங்கள், வங்கிகள் என அனைத்திலும் வடமாநிலத்தவர்கள் உள்ளிட்ட வெளி மாநிலத்தவரே நிறைந்துள்ளனர். விவசாயம், சித்தாள் போன்ற அடிமட்ட பணிகளிலும் வட மாநிலத்தவரே நிறைந்துள்ளனர்.

இன்னொருபுறத்தில், பா.ஜ.க. போன்ற கட்சிகள் வடமாநிலத்தவர் அதிகமுள்ள பகுதிகளிலேயே மார்வாடிகளின் துணையோடு காலூன்றி நிற்பது கண்கூடாகத் தெரிகிறது. எனவே, தமிழ்நாட்டில் குடியேறி வரும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட வெளி மாநிலத்தவருக்கு இனியாவது வரம்புகட்டித் தடுப்பதே இன்றைய தேவையாகும். 

எனவே தமிழ்நாட்டில் குடியேறும் வெளி மாநிலத்தவருக்கு, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை  வழங்கக் கூடாது.  நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் உள்ளதைப் போல், வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்குள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில்,  உள் அனுமதிச் சீட்டு முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இளைஞர் ஜாயின்ஷா மரணத்திற்கு காரணமான, வட மாநிலத்தவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in