`பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதை உறுதி செய்க'- வேல்முருகன் கோரிக்கை

`பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவதை உறுதி செய்க'- வேல்முருகன் கோரிக்கை

பழநி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு  நடத்துவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்று  தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சம்ஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், தமிழில் குடமுழுக்கு முறையாக நடத்தப்படவில்லை.

இச்சூழலில், தமிழ் கடவுள் பழநி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இதனை தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் தமிழ் இராசேந்தின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பழநி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

எனவே, பழநி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சம்ஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என்று கேட்டுக் கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in