`விவசாயிகளிடம் பேசாமல் அரசியல்வாதிகளிடம் பேசுவதா?'- என்எல்சி நிர்வாகத்தை எச்சரிக்கும் வேல்முருகன்

வேல்முருகன்
வேல்முருகன்

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் எடுப்பு,  இழப்பீடு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக விவசாயிகள் தரப்பையும்  அழைத்து பேசாவிட்டால் மாபெரும் போராட்டம் வெடிக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் எச்சரித்துள்ளார். 

இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், 'நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கும், கொடுக்க இருப்போருக்கும் உரிய இழப்பீடு மற்றும் நிரந்தர வேலை வழங்க வலியுறுத்தி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீண்ட நெடிய நாட்களாக, குரல் எழுப்பியும், போராடியும் வருகிறது. பொதுமக்கள், விவசாயிகளிடம் எடுத்த, எடுக்கப்பட உள்ள நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும், வீட்டுமனைக்கு வகைப்பாடு வித்தியாசமின்றி ஒரு செண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும். மாற்றுமனை குறைந்தபட்சம் 20 செண்டும் வழங்க வேண்டும்.

வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு என்எல்சியில் நிரந்தர வேலையும், வேலை பெற விரும்பாதவர்களுக்கு  50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டத்தை, சமீபத்தில் கூட அனைத்து கட்சிகளின் சார்பில் எனது தலைமையில் முன்னெடுத்திருந்தேன்.

அதுதவிர இது தொடர்பாக விவசாயிகளை அழைத்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதனை கருத்தில் கொள்ளாமல்,  அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்களை மட்டும் அழைத்து, வடலூரில் உள்ள மங்கையர்கரசி மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தியுள்ளது ஏற்புடையதல்ல. இக்கூட்டத்திற்கு விவசாயிகளை அழைக்காததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரான நானும், நிர்வாகிகளும், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தோம்.

இக்கூட்டம் நடப்பதை அறிந்த வந்த ஏராளமான விவசாயிகளை அனுமதிக்காமல், ஆங்காங்கே காவல்துறையை வைத்து மிரட்டியதும், விவசாயிகள் வந்த வாகனங்களை நிறுத்தி, சாவிகளை பறிமுதல் செய்ததும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல்துறையை வைத்து விவசாயிகளை அச்சுறுத்தி, நிலங்களை பறித்து விடலாம் என நினைப்பது, மனித உரிமைக்கு முரண்பாடானது. மாவட்ட நிர்வாகத்தின் அத்தகைய போக்கு சர்வாதிகாரத்துக்கு ஒப்பானது. எனவே, இவ்விவகாரத்தில் தமிழக முதல்வர்  உடனடியாக தலையிட்டு, விவசாயிகளுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  விவசாயிகளுடனான சுமூக உறவை ஏற்படுத்திக்கொண்டு தான், நிலத்தை அளவீடு செய்வதற்கோ, நிலத்தை கையகப்படுத்துவதற்கோ செல்ல, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்த வேண்டும். 

இதனை மீறி, காவல்துறை, என்எல்சி நிர்வாகத்தை வைத்துக்கொண்டு, மாவட்ட நிர்வாகம், நிலத்தை கையகப்படுத்த வந்தால், பாதிக்கப்பட்ட கிராம மக்களையும், விவசாயிகளையும் ஒன்று திரட்டி, மாபெரும் போராட்டம் வெடிக்கும்' என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in