முதல்வரால் மக்களை திருப்திப்படுத்த முடியவில்லை!

த.வா.க தலைவர் வேல்முருகன் பேட்டி
வேல்முருகன்
வேல்முருகன்

திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினரானவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன். சமீபகாலமாக திமுகவுக்கு எதிரான கருத்துகளையும் முன்வைக்கிறார். அதுகுறித்தும் தற்போதைய தமிழக அரசியல் சூழல் குறித்தும் அவரிடம் உரையாடியதிலிருந்து...

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தச் சொல்லி ஆர்ப்பாட்டங்களை நடத்தி முடித்திருக்கிறது த.வா.க. தற்போது அதற்கான அவசியம் என்ன வந்தது?

தமிழகம் எப்போதுமே சமூகநீதிக்கான ஒரு வழிகாட்டி மண். அதனால்தான் 1952-ல் தந்தை பெரியார் அவர்களால் கோரப்பட்டு, மத்திய அரசால் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அப்படி பெறப்பட்ட சமூக நீதி மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் உரிய விகிதத்தில் வழங்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த சந்தேகம் இல்லாமல் உண்மையிலேயே அனைவருக்குமான சமூகநீதி கிடைக்கிறது என்பதை உறுதி செய்யவேண்டுமானால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையில் அந்தந்த சாதியினருக்கு உரிய ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் வழங்கப்படுகிற இட ஒதுக்கீடுதான் நிரந்தரமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதற்காகத்தான் மத்திய அரசிடம் அனுமதிபெற்று தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்கிறோம்.

அதிமுகவிலிருந்து வந்த சேகர்பாபு, செந்தில்பாலாஜிக்கு எல்லாம் அமைச்சர் பதவி கொடுத்த முதல்வர் ஸ்டாலின் , எனக்குத்தரமாட்டாரா என்பதாகப் பேசியிருந்தீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?

புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் எனக்கு முன்னாள் பேசியவர்கள் என்னை அமைச்சராக்க வேண்டும் என்பதாக பேசினார்கள். அதற்கு பதிலளித்துப் பேசியபோது, “ராஜகண்ணப்பன் தனியாக கட்சி நடத்தினார். திமுகவில் போய் இணைத்தபோது அவருக்கு அண்ணன் ஸ்டாலின் அமைச்சர் பதவி கொடுத்தார். அதிமுகவிலிருந்து வந்த சேகர்பாபு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலருக்கும் சிறப்பான துறைகளை கொடுத்திருக்கிறார். அப்படி நானும் போய் கட்சியை இணைக்கிறேன்; எனக்கு அமைச்சர் பதவி கொடுங்கள் என்று கேட்டால் கொடுக்க மாட்டேன் என்றா சொல்லப் போகிறார்? ஆனால், எனக்கு அது முக்கியமில்லை. நான் அப்படி கேட்கப் போவதுமில்லை.

நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளை ஒன்றிணைத்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். பதவி வரும் போகும் ஆனால், மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களோடு நின்று போராட வேண்டும் என்பதுதான் வேல்முருகனின் எண்ணமும் கொள்கையும். எனக்கென்று தனித்துவம் இருக்கிறது, தனி பெயர் இருக்கிறது, புகழ் இருக்கிறது. ஒரு அமைச்சர் பதவிக்காக அதையெல்லாம் இழந்துவிட மாட்டேன்” என்றுதான் பேசினேன். அதில் ஒரு பகுதி மட்டும் சிலரால் பெரிதாக்கப்பட்டுவிட்டது.

கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஜிங் - ஜாங் போட்டுக் கொண்டிருக்கமாட்டேன் என்று சொல்லியிருந்தீர்களே..?

அது என்எல்சி விவாகரத்துக்காக பேசப்பட்டது. என்எல்சி நிர்வாகம் நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை ஆகியவற்றை வழங்க மறுக்கிறது. அதைக் கண்டித்து பேசும்போது அப்படிப்பேச நேர்ந்தது. என்எல்சி புதிய வேலை வாய்ப்புகளில் தமிழர் அல்லாதவர்கள் முழுவதுமாக திணிக்கப்படுகிறார்கள். அதை தடுத்து நிறுத்தி தமிழர்களுக்கு அந்த வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டும். என்எல்சியை எதிர்த்து ஜெயலலிதா, கலைஞர் காலங்களிலும் நான் போராடியவன். அதையெல்லாம் பேசும்போது கூட்டணிக்காக எல்லாவற்றையும் இந்த வேல்முருகன் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டான் என்பதாக பேசினேன்.

தமிழக முதல்வர் இதை நிச்சயம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் எல்லாவற்றிலும் அது எந்தத் துறையாக இருந்தாலும் அதில் வட மாநிலத்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அதை தடுத்து நிறுத்த வேண்டும். இது முதல்வரின் முக்கியமான கடமை என்று நான் வலியுறுத்துகிறேன்.

வன்னியர்களுக்கான நீதியும், நிதியும் மறுக்கப்படுவதாகவும் கூறியிருந்தீர்களே..?

பட்டூரில், பத்தாம் வகுப்பு படிக்கும் வன்னியர் சமூகத்து மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் உள்பட யாருமே ஆறுதல் சொல்லக்கூட போகவில்லை. அதற்குரிய நடவடிக்கைகள், இழப்பீடு எதுவும் இல்லை. இதுவே மற்ற சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருந்தால் அரசு நிர்வாகம் முன்னால் ஓடிவந்திருக்கும். பண்ருட்டி அருகே ஆற்றில் மூழ்கி ஏழு பேர் இறந்த சம்பவத்தில் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இதுவரை இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. இப்படி பாரபட்சம் காட்டுவது கூடாது என்பதையும் நாங்கள் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

திமுக அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறுகிறீர்களா?

திமுக அரசு என்று பொதுவாகச் சொல்லிவிட முடியாது. திமுக அரசில் இருக்கிற ஒருசில உயர் அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொள்ளத்தான் செய்கிறார்கள். அவர்கள் தான் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவேண்டும் ஆனால், கொண்டு செல்ல மறுக்கிறார்கள். பட்டூர் பிரச்சினையை கையிலெடுத்து சாதியப் பிரச்சினையாக ஆக்கி சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மாற்றியிருக்க முடியும். இப்படி மாற்றியிருந்தால் அரசின் கவனம் அந்த பக்கம் திரும்பும் என்ற நிலை இருக்கிறது. அப்படி ஒரு நெருக்கடியை கொடுத்தால்தான் அரசாங்கம் கவனம் செலுத்துமா என்கிற போதுதான் கோபம் வருகிறது.

கூட்டணிக் கட்சி தலைவரான நீங்கள் முதல்வரிடம் நேரடியாகவோ, அல்லது சட்டமன்றத்திலோ கூட பேசியிருக்கலாமே?

சட்டமன்றம் அப்போது நடக்கவில்லை. அதனால் இந்த பிரச்சினையை சட்டமன்றத்தில் எழுப்ப முடியவில்லை. அந்த நேரத்தில் அவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதனால் நேரிலும் அவரிடம் பேச முடியவில்லை.

உங்களுக்கு திமுகவில் உரிய அங்கீகாரம் கொடுக்கப் படுகிறதா?

அதிலெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. முதல்வர் என்னிடம் உரிமையோடு பேசுகிறார். சந்திக்கும் இடங்களில் அன்போடு நடந்து கொள்கிறார். சந்திக்க நேரம் கேட்டால் கொடுக்கப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் நடக்கும் சிறு சிறு பிரச்சினைகளை உடனுக்குடன் முதல்வரிடம் அதிகாரிகள் எடுத்துச் சொல்வதில்லை என்பதுதான் எங்களுடைய ஆதங்கம். முதல்வர் அதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒரு வருட திமுக ஆட்சி எப்படி இருக்கிறது? கடந்த ஆட்சியே தேவலாம் என்று மக்கள் பேச ஆரம்பித்திருப்பது போல தெரிகிறதே..?

கடந்த ஆட்சியில் நிர்வாகத் திறமையின்மையால் எல்லாவற்றையும் அள்ளிவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அதையெல்லாம் சரிசெய்வதற்கு இந்த அரசாங்கத்துக்கு நேரமும் போதவில்லை; நிதியும் போதவில்லை. முதலமைச்சரை பொறுத்தவரை மிகக் கடுமையாக உழைக்கிறார். தன்னுடைய ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். தமிழக நிதி நிலைமையோ அதலபாதாளத்தில் இருக்கிறது. இருப்பதை வைத்துக்கொண்டு மக்களை திருப்திப்படுத்த முயல்கிறார் முதல்வர். அது முடியவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

அண்மைக் காலமாக பாஜகவுடன் திமுக இணக்கமாகச் செல்வதுபோல் தெரிகிறதே?

அதற்குத்தான் திருமாவளவனின் மணி விழாவில் பேசும்போது முதல்வர் பதில் சொல்லிவிட்டாரே... உரிமைக்காக குரல் கொடுக்கிறேன் என்ற அவர், தமிழர் நலனுக்காக மத்திய அரசிடம் கேட்டுப்பெற்றுத்தான் ஆகவேண்டும் என்று பதில் சொல்லிவிட்டார். அதைத்தாண்டி அதில் சொல்வதற்கு ஒன்றுமில்லை.

பல்கலை துணைவேந்தர்களை முதல்வரே நியமிக்கலாம் என்கிற சட்டத்திருத்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளுநர் அதைப் பொருட்படுத்தாமல் மூன்று பல்கலைக்கழங்கங்களுக்கு துணைவேந்தர்களை நியமித்துள்ளாரே?

ஆளுநர் செய்திருப்பதை ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அவரிடமிருக்கும் நிலையில் இப்படி முந்திரிக்கொட்டைத்தனமாக அவர் மூன்று துணைவேந்தர்களை நியமித்திருப்பதை முதல்வர் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், கல்வித்துறைக்கும் இழைக்கப்பட்டுள்ள அநீதியாகவே கருதுகிறேன். பாஜக தனது சர்வாதிகார போக்கை ஆளுநர் மூலமாக தமிழகத்தில் செயல்படுத்துவதை ஒருபோதும் இனி பொறுத்துக்கொள்ள முடியாது.

முதல்வரின் டெல்லி பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

அதை அரசியல் சார்ந்ததாக நான் பார்க்கவில்லை. அரசு சார்ந்ததாக மட்டுமே பார்க்கிறேன். ஒரு மாநில முதலமைச்சர் ஒன்றியத்தின் தலைமை அமைச்சரை சந்திக்கத்தான் வேண்டும். உரிமைகளை கேட்டுப்பெறத்தான் வேண்டும். அதில் எந்த தவறுமில்லை. கடுமையான மோதல் போக்கை கையாளுகிற மம்தா பானர்ஜி கூட பிரதமரைச் சந்தித்து தங்கள் மாநில உரிமைகளுக்காக பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறார். அதில் தவறு ஒன்றுமில்லை. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நான் கருதவில்லை.

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவின் தலையீடு இருப்பதாக நினைக்கிறீர்களா?

அதிமுகவில் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் அதில் பாஜகவின் தலையீடு இருப்பதாகத்தான் தோன்றுகிறது.

38 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பி-க்கள் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்று வருத்தப்பட்டீர்களே... அந்த நிலைமை மாறியிருக்கிறதா?

இல்லை அது அப்படியேதான் தொடர்கிறது. அரசின் உயர் பதவிகளில் வன்னியர்களுக்கான பிரதிநிதித்துவம் மிகமிகக் குறைவாக இருக்கிறது. இதை கவலை தரும் விஷயமாக நான் பார்க்கிறேன். அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த மாநிலத்தில் அரசின் துறைச்செயலாளர்களாக நியமிக்கப் படுகிறார்கள். ஒரே மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மாவட்ட ஆட்சித் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இது தமிழக இளைஞர்கள் மத்தியில், படித்தவர்கள் மத்தியில் பெரிய அளவில் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி யிருக்கிறது. ஐஏஎஸ் அதிகாரிகளில் வடநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தமிழக முதல்வர் இதிலும் கவனம் செலுத்த வேண்டும். மண்ணின் மைந்தர்களுக்கான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

தமிழக வேலை தமிழருக்கே என்கிற உங்களுடைய நிலைப்பாடு எந்த அளவில் இருக்கிறது?

அதற்காகத்தான் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறோம் தமிழகத்தில் இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம், ஒத்த கருத்துடைய இயக்கங்களோடு இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்திய அளவில் தமிழர் வேலை தமிழர்களுக்கே என்பதை டிரண்ட் செய்திருக்கிறோம். அந்தந்த மாநில வேலை வாய்ப்புகளை அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே 100 சதவீதம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி எங்களுடைய போராட்டம் மேலும் வலுப்பெறும். மத்திய அரசின் வேலை வாய்ப்புக்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இதை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்தால் நாட்டில் ஒற்றுமைக்கே அது ஆபத்தாக முடிந்துவிடக் கூடும்.

2024-ல் நாடாளுமன்றத்தில் வேல்முருகனின் த.வா.க கால் பதிக்குமா?

ஒவ்வொரு அரசியல் கட்சியின் லட்சியமாக, நோக்கமாக அதுதான் இருக்க முடியும். எங்களுக்கும் அதுவே நோக்கமாக இருக்கிறது. மக்கள் மன்றத்தில் மட்டும் போராடிக் கொண்டிருந்தால் போதாது. மக்களின் பிரதிநிதியாகவும் சென்று உரிமைகளுக்காக போராட வேண்டும். அதற்கான வழியில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம். காலமும் சூழலும் கைகூடும்போது அது நிச்சயம் நடக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in