மேயர் என்றால் சட்டத்தை மீறலாமா?

பதிவெண் விவகாரம் பற்றவைத்த சர்ச்சை!
மேயர் சுஜாதா
மேயர் சுஜாதா

வேலூர் திமுக மேயர் சுஜாதாவின் அலுவலகப் பயன்பாட்டிற்கான காரில் வாகன எண்ணுக்குப் பதிலாக ‘மேயர் வேலூர் மாநகராட்சி’ என வைத்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மோட்டார் வாகனச் சட்டமெல்லாம் சாமானியர்களுக்குத்தானா அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இல்லையா? என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மேயரிடம் பேசுவதற்கு முன்னதாக உண்மையில் மோட்டார் வாகனச் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாமா?

ஒரு குறிப்பிட்ட வாகனத்தை எளிதில் அடையாளம் காண்பதற்கும், சட்டபூர்வமான அனுமதி பெறுவதற்கும் வாகன எண் கட்டாயம் தேவை. அந்த எண் வாகனத்தின் முன்னும் பின்னும் தெளிவான முறையில், அனுமதிக்கப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டு வைக்கப்பட வேண்டும் என மோட்டார் வாகனச் சட்டம் சொல்கிறது. ஆனால், இதையெல்லாம் செல்வாக்குப் புள்ளிகள் சிலர் அவ்வளவாய் செவிமடுப்பதில்லை. அவர்கள் தங்கள் இஷ்டம் போல் பதிவெண்களை எழுதிக் கொள்கிறார்கள்.

உதாரணத்துக்கு, 8055 என்ற எண்ணை ‘BOSS’ என்று எழுதிக் கொண்டு பந்தாவாக பவனி வருகிறார்கள். சிலர் ப, ச, க, உ எனத் தமிழில் வாகன எண்ணைப் பொருத்துகிறார்கள். இப்படி தூய தமிழில் பதிவெண் எழுதப்பட்ட வாகனங்கள் விபத்து ஏற்படுத்திவிட்டு வேகமாகச் செல்லும் போது, அந்த வாகன எண்ணை எளிதில் குறித்து வைத்துக் கொள்வதில் சிரமம் ஏற்படும். இப்படி ஒவ்வொருவரும் தங்களின் வாகனங்களில் தாய் மொழியில் பதிவெண்களைப் பதிவிட நினைத்தால் அதைப் பிற மொழியினரால் எப்படிப் புரிந்து கொள்ள முடியும்?

அரசியல்வாதிகள் சிலர் தங்களது வாகன எண்ணை தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியின் கொடியின் வண்ணத்தில் எழுதியிருப்பதையும் நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். சிலர் வாகன எண்ணையே வைக்காமல் தங்கள் பதவியை வாகன எண் போல பொருத்திக்கொள்ளும் விதிமீறல்கள் உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு அதிகரித்துள்ளன. செங்கல்பட்டு பகுதியில், ‘POLICE SURGEON’ என முன்பக்கமாகப் பலகை வைத்துப் பல வாகனங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அப்படி ஒரு பதவியே காவல் துறையில் கிடையாது. இருந்தும், இதையெல்லாம் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என்பதுதான் வேதனை.

இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற வாகன சோதனையில், ஒரே நாளில் சுமார் 4 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அது போல் மாதக் கடைசியிலும் வழக்குகளின் எண்ணிக்கைக்காகப் போக்குவரத்து காவலர்களின் கெடுபிடிகள் அதிகம் இருக்கும். கார் கண்ணாடிகளில் உள்ள கறுப்பு ஸ்டிக்கர் அகற்றும் விவகாரத்திலும் சாமானியர்களே பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்.

இது குறித்து அண்மையில் கருத்துத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், “மற்றவர்களின் வாகனங்களில் உள்ள கறுப்பு ஸ்டிக்கரை அகற்றிவிட்டு, காவல்துறை உயர் அதிகாரிகளின் வாகனங்களில் மட்டும் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருக்க அனுமதிப்பதை என்னவென்று சொல்வது?” என கேள்வி எழுப்பி இருந்தது.

தமிழக ஆளுநர் கார்
தமிழக ஆளுநர் கார்

இந்த நிலையில் தனது வாகனத்தில் பதிவெண்ணுக்குப் பதிலாக மேயர் பெயர் பலகையை வைத்தது குறித்து வேலூர் மேயர் சுஜாதாவிடம் பேசினோம். “காரின் பின்புறம் 'மேயர் வேலூர் மாநகராட்சி' என்ற போர்டுக்கு கீழ் காரின் தற்காலிக பதிவு எண்ணை ஒட்டி வைத்திருந்தோம். அதை யாரோ எடுத்துவிட்டுப் போட்டோ எடுத்து வாட்ஸ்-அப் குரூப்பில் பகிர்ந்துள்ளார்கள். அதுதான் சர்ச்சைக்குக் காரணம். நிரந்தரப் பதிவு எண்ணை காரில் முறையாக பொருத்தச் சொல்லி இருக்கிறோம். கமிஷ்னர் வாடகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்த கார் என்பதால் ‘மேயர்’ என போர்டு வைத்தது பற்றி அவருக்குத்தான் தெரியும்” என்றார் அவர்.

வாகனப் பதிவு எண் பயன்படுத்துவது குறித்து 2018-ல் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர்கள் ஆகியோரின் வாகனங்களும், வெளியுறவுத்துறை அமைச்சரகத்தின் வாகனங்களும் மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவு செய்யப்படுவது இல்லை. அந்த வாகனங்களும் மோட்டார் வாகனச் சட்டப்படி பதிவுசெய்யப்பட்டு பதிவெண்கள் வெளியில் தெரியும்படி நம்பர் பிளேட்களைப் பொருத்த வேண்டும். மோட்டார் வாகனச் சட்டத்தைப் பின்பற்றாத வாகனங்களை உடனே பறிமுதல் செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தது அந்தத் தொண்டு நிறுவனம்

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ‘குடியரசுத் தலைவர், துணைத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோர் பயன்படுத்தும் வாகனங்களில் வாகனப் பதிவு எண்கள் வெளியில் தெரியும்படி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல்படி அந்த வாகனங்களில் வெளியில் தெரியும்படி வாகன எண்கள் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டன. குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கே மோட்டார் வாகனச் சட்டம் பொருந்தும் என்கிறபோது ஒருசில அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் எங்களை அந்தச் சட்டம் என்ன செய்துவிடும் என்று ஜம்பமடிப்பது வேதனை கலந்த வேடிக்கை தான்.

சுரேஷ்
சுரேஷ்

இது குறித்து நம்மிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேஷ், “மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988-ன் படி, வாகன எண்களை எப்படிப் பதிவிட வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வாகன எண்ணைத் தவறாக பயன்படுத்தினால் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதிக்க முடியும். வாகனத்தைப் பறிமுதல் செய்யவும் சட்டத்தில் இடமுள்ளது. அரசியல் பிரமுகர்கள் தான் பெரும்பாலும் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறுகிறார்கள். அவர்களின் மிரட்டல்களுக்கு காவல் துறையினர் பணிந்து போகிறார்கள். குறிப்பிட்ட எண்ணிக்கையில் வழக்குப் பதிய வேண்டும் என்ற டார்க்கெட் காரணமாக வழக்குப் போடுகிறார்கள். அதிலும் பெரும்பாலும் அப்பாவி மக்களே பாதிப்படைகிறார்கள். அப்படியில்லாமல் பாரபட்சமின்றி போக்குவரத்துப் போலீஸார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இது போன்ற விதிமீறல்களை தடுக்கமுடியும்” என்றார்.

காவல் துறையினர் இவ்விஷயத்தில் இனியாவது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும். அது குற்றங்களைத் தடுக்க அவர்களுக்கும் உதவும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in