ஊதிய உயர்வு கேட்டு போராடியவர்களிடம் ‘நெஞ்சுக்கு நீதி’ படம் பார்க்கச் சொன்ன எம்எல்ஏ!

வேலூரில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.
வேலூரில் இன்று நடைபெற்ற தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.

ஊதிய உயர்வு கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களிடம் 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படத்தை பாருங்கள் என்று திமுக எம்எல்ஏ சொன்னதால் அதிர்ச்சியடைந்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

வேலூர் மாநகராட்சி முன்பு ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தூய்மை பணியாளர்கள் 10 நாள் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இன்று 2-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. அவர்களைச் சமாதானம் செய்வதற்காக வேலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினர் கார்த்திகேயன் சென்றார்.

அப்போது அவர்,” தமிழக முதல்வர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை அவசியம் பாருங்கள். இந்த படம் உங்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ளது. அதில் நீங்கள் படும் துயரங்கள் படமாக எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் படம் பார்க்க நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று கூறினார். ஊதிய உயர்வு கேட்டு போராடிவரும் தங்களிடம் எம்எல்ஏ திரைப்படம் பார்க்கச் சொல்கிறாரே என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பேசும் எம்எல்ஏ கார்த்திகேயன்.
தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் பேசும் எம்எல்ஏ கார்த்திகேயன்.

இதனால் கடுப்பான சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், "நீங்க, இங்கேயே இருந்து ஏதாவது பண்ணுங்க. அதுக்கு நாங்க பொறுப்பாக முடியாது. இவ்வளவுதான் நாங்க செய்ய முடியும். அதிமுக ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தக்காரர்களை நீக்கிவிட்டு, நாங்க புதிதாக ஒப்பந்தம் எடுக்கிறோம். அப்போது நீங்க வேலைக்கு வந்தால் போதும். மாநகராட்சியை முற்றுகையிட்டால் உங்களுக்குத்தான் நஷ்டம்" என்று அவர் பேசினார். அவரின் பேச்சுக்கு தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கார்த்திகேயன் அங்கிருந்து சென்று விட்டார். திமுக சட்டப்பேரவை உறுப்பினரின் பேச்சு வேலூர் தூய்மை பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in